மெட்ரோ – விமர்சனம்

நாயகன் சிரிஷும் அவரது நண்பரான சென்ட்ராயனும் ஒரு பத்திரிகையில் பணிபுரிந்து வருகிறார்கள். நாயகனின் அப்பா போலீஸ் வேலையில் இருந்து ஓய்வானவர். இவரின் தம்பி சத்யா, இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர்களது குடும்பம் நடுத்தர குடும்பம் என்பதால், செலவுகளை குறைத்து, திட்டம் போட்டு வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் சத்யா, மற்ற மாணவர்களைப் போல் தானும் விலையுயர்ந்த பைக், போன் வைத்து சுற்றவேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதையெல்லாம் வீட்டில் கேட்கும் சத்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. சத்யாவுடன் படிக்கும் நிஷாந்த் ஒருநாள் விலையுயர்ந்த போன் ஒன்றை வைத்துக்கொண்டு பேசி வருவதை பார்க்கும் சத்யா, அவனிடம் அதை எப்படி வாங்கினாய் என்று கேட்கிறார்.

அப்போது, நிஷாந்த், சத்யாவை பைக்கில் அழைத்துச்சென்று சாலையில் செல்லும் ஒரு பெண்ணின் கழுத்தில் கிடக்கும் செயினை பறித்துக்கொண்டு செல்கிறார். பின்னர், மறைவான இடத்துக்கு சென்று சத்யாவிடம், தான் இப்படி செயினை பறித்துதான் ஆடம்பரமாக செலவு செய்து வருகிறேன் என்று கூறுகிறார். உனக்கும் விருப்பம் இருந்தால் என்னுடன் சேர்ந்துகொள் என்றும் கூறுகிறார்.

ஆடம்பரத்துக்கு ஆசைப்பட்டு சத்யா, நிஷாந்துடன் சேர்ந்து செயின் பறிக்க முடிவு செய்கிறார். இந்த கூட்டத்துக்கு தலைவனாக இருக்கும் பாபி சிம்ஹா, பறிக்கும் நகைகளை விற்கும் தொகையில் முக்கால் வாசியை எடுத்துக் கொண்டு மீதியை அனைவருக்கும் தருவது சத்யாவுக்கு பிடிக்கவில்லை. எனவே, தான் பறிக்கும் நகைகளை தானே விற்று பணமாக்க முடிவு செய்கிறார். இது பாபி சிம்ஹாவுக்கு தெரிய வந்ததும், சத்யாவை அழைத்து கண்டிக்கிறார். இருந்தும் சத்யா பாபி சிம்ஹாவை எதிர்க்க முடிவு செய்கிறார்.

இறுதியில், பாபி சிம்ஹா-சத்யா இருவருக்கும் உண்டான மோதல் எங்குபோய் முடிந்தது? சத்யாவின் குடும்பம் இதனால் எந்தளவுக்கு பாதிப்பை அடைந்தது? என்பதே மீதிக்கதை.

நாயகன் சிரிஷுக்கு முதல் படம்தான் என்றாலும் சிறப்பானதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முதல் பாதியில் இவருக்கு சரியாக வாய்ப்பு வழங்காவிட்டாலும், இரண்டாம் பாதியில் ஓரளவுக்கு வந்து தனது கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். நாயகி மாயா, இப்படத்தில் கதாநாயகி ஒருவர் வேண்டும் என்பதற்காக சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி, இவருக்கு காட்சிகள் மிகமிக குறைவு.

சத்யாவுக்கு இப்படத்தில் கதையை தாங்கிச் செல்லும் அளவிற்குண்டான கதாபாத்திரம். தனது நடிப்பால் அதை ஓரளவுக்கு பூர்த்தி செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். பாபி சிம்ஹா மீண்டும் ஒரு வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு இவரை இந்த கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. அவரும் தனக்கே உரிய பாணியில் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

நாயகன் கூடவே வரும் சென்ட்ராயன் இதுவரையிலான படங்களில் காமெடி வேடம் ஏற்று நடித்தவர், இப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகனின் அம்மா, அப்பா கதாபாத்திரத்தில் நடித்தவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

செயின் பறிப்பை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன், படம் முழுக்க செயின் பறிப்பு சம்பவங்கள் இருந்தாலும் திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்வதால் படம் பார்ப்பதற்கு சலிப்பு ஏற்படாமல் செல்கிறது. ஒரு செயின் பறிப்பு கும்பலுக்கு பின்னால் என்னென்ன பிரச்சினைகள் உள்ளது என்பதையும் எடுத்துக் கூறியிருக்கிறார்.

ஜோகன் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. பின்னணி இசையிலும் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார். இவருடைய இசை படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது எனலாம். உதயகுமார் தனது கேமராவால் விதவிதமான கோணங்களில் காட்சிகளை அமைத்து ரசிக்க வைத்திருக்கிறார். இரவு நேர காட்சிகளில் எல்லாம் சரியான ஒளியமைப்பை வைத்து சிறப்பாக செய்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘மெட்ரோ’ வேகமெடுக்கும்.