அங்காளி பங்காளி – விமர்சனம்

நாயகன் விஷ்ணுப்ரியன் ஒரு கார் ஷோரூமில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். இவர் கஷ்டப்பட்டு உழைத்து வாழ்க்கையில் பெரிய வீடு கட்டி, குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்ற லட்சியத்துடன் வேலை பார்த்து வருகிறார். இதனால் கஷ்டப்பட்டு உழைக்கும் விஷ்ணுவுக்கு அந்த ஷோரூமிலேயே மிகப்பெரிய பொறுப்பும் கிடைக்கிறது.

கூடவே, தனது லட்சியத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அடைந்து வருகிறார். இவரும், ஆசிரியையான நாயகி சானியதாராவும் ஒருவருக்கொருவர் காதலித்து வருகிறார்கள். இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொள்கிறார்கள்.

விஷ்ணுவின் வளர்ச்சி பிடிக்காத அந்த ஷோரூமிலேயே சூப்பர்வைசராக பணியாற்றுபவர் இவரை பழிவாங்க துடிக்கிறார். ஒருகட்டத்தில் விஷ்ணுவால் சூப்பர்வைசரின் வேலையும் பறிபோகிறது. இதனால் சூப்பர்வைசரின் திருமணம் நின்றுபோகிறது. இதனால், கோபமடைந்த அவர் விஷ்ணுவின் சந்தோஷத்தை எப்படியாவது கெடுக்க நினைக்கிறார்.
இறுதியில், சூப்பர்வைசரின் சதியில் விஷ்ணு சிக்கினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

விஷ்ணுப்ரியன் சேல்ஸ்மேன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நாயகியுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளாட்டும், எதிரிகளுடன் சண்டை போடும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு குத்துப்பாட்டுக்கு அசத்தலான நடனம் ஆடி ரசிக்க வைத்திருக்கிறார்.

சானியதாரா பார்க்க அழகாக இருக்கிறார். அளவான கவர்ச்சியுடன், பொறுப்பான குடும்ப பெண் கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகன் நண்பனாக சூரி வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பை கொடுத்திருக்கிறது. டெல்லி கணேஷ், மீரா கிருஷ்ணன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் பாலமுருகன் குடும்பத்தோடு ரசிக்கும்படியான ஒரு கதையை கொடுத்திருக்கிறார். ஆனால், படத்தை நீட்டிப்பதற்காக ஒவ்வொரு காட்சிகளின் நீளத்தையும் அதிகரித்திருப்பது சலிப்பை தருகிறது. ரொமான்ஸ் காட்சிகள், சண்டைக் காட்சிகள் எல்லாம் சிறப்பாய் தந்திருக்கிறார்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். அதேபோல் பின்னணி இசையிலும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். யுகே செந்தில்குமாரின் ஒளிப்பதிவு சுமார் ரகம்தான்.

மொத்தத்தில் ‘அங்காளி பங்காளி’ பாசம் குறைவு.