ராஜா மந்திரி – விமர்சனம்

சிக்கலான கதை, கமர்ஷியலுக்காக மண்டையைக் குழப்பும் ட்விஸ்டுகள், கலர்ஃபுல் க்ராஃபிக்ஸ், டாஸ்மாக் பாடல், காற்றில் பறக்கிற ஃபைட், கவர்ச்சி அம்சங்கள் என்று பலவற்றை எடுத்துக் கொண்டு ஒரு பையில்போட்டு அதை ஓரமாக வைத்துவிட்டு, ‘இதெல்லாம் வேண்டாம்ப்பா’ என்று ஆற அமர அழகான ஒரு கதை எழுதி, உணர்வுபூர்வமாக அதைப் படமாக்கியிருக்கிற இயக்குநர் உஷா கிருஷ்ணனுக்கு ஒரு கூடை சாக்லேட்ஸ்!

சின்ன வயதிலிருந்தே, தெரிந்தும் தெரியாமலும் அண்ணன் காளிவெங்கட்டுக்கு டார்ச்சர் கொடுக்கிற தம்பி கலையரசன். பெண்பார்ப்பதில் செஞ்சுரியே அடிக்கிற லெவலுக்குப் போன அண்ணனுக்கு ஒருவழியாக ஒரு பெண் ஓகே ஆகிறது. ஆனால், எதிர்பாராத திருப்பமாக அண்ணனின் கல்யாணத்தை, தம்பியே நிறுத்த வேண்டிய சூழல். ஏன் என்பதையும் எப்படி என்பதையும் கொஞ்சமும் டல்லடிக்காமல், நீரோடை போன்று கொண்டுபோய் க்ளைமாக்ஸில் சுபமாய் முடித்திருக்கிறர்கள்.

விஞ்ஞானமும், குறியீடுகளும், காமெடிகளும் கோலோச்சிக் கொண்டிருக்கும் சமயத்தில் இப்படி ஓர் ஃபீல்குட் மூவியைக் கொடுத்திருக்கும் இயக்குநருக்கு இது முதல்படம். டைட்டிலில் பறவைப் பார்வையில் விரிகிற கிராமத்தைப் பார்க்கையில் எல்லோருக்கும் ஏக்கப்பெருமூச்சு வருகிறது.

’டபுள் ஹீரோ சப்ஜெக்ட்’ என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால், காளி வெங்கட், சந்தேகத்துக்கிடமின்றி ரேஸில் முந்துகிறார். பொறுப்பான அண்ணனாக அப்பாவின் சோடாபிஸினஸைக் கையிலெடுத்துக் கொண்டு கடை கடையாக சோடா போடுவதும், அம்மாவுக்கு உதவுவதுமாய் இருப்பவருக்கு ‘இன்னும் நமக்கு கல்யாணமாகலையே’ என்கிற ஏக்கம் இருப்பதை வெறும் முகபாவனைகளிலேயே கடத்துகிறார். பக்கத்து வீட்டு வைஷாலியை அத்தனை ஆழமாகக் காதலித்தாலும், சூழல் காரணமாக வேறொரு பெண்ணை ஓகே செய்துவிட்டு ‘இதுகூட நடக்கலைன்னா..’ என்று தம்பியிடம் பேசும் காட்சியும் சரி, வைஷாலி வந்து அவர் தரப்பைச் சொன்னதும் பதறி பின்னாலேயே போகும் காட்சியும் சரி.. கச்சிதம். காளிவெங்கட்டுக்கு இந்தப் படம் ஓர் அடையாளமாக இருக்கும்.

துறுதுறு தம்பி வேடத்திற்கு கலையரசன் அழகாகப் பொருந்திப் போகிறார். அவருக்கும் ஷாலின் சோயாவுக்குமான ஆரம்ப மோதல் காட்சிகள் சுவாரஸ்யம். காதலிக்கும் அண்ணனுக்கும் இடையில் தவிக்கும் காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

காளிவெங்கட்டுக்கு அடுத்து படத்தில் க்ளாப்ஸ் அள்ளுகிறார் பாலசரவணன். ஒவ்வொரு வசனத்துக்கும் கைதட்டலும், சிரிப்புமாய் நிறைகிறது அரங்கம். அதுவும் அந்த பரீட்சையில் பிட் அடிக்கும்போது எக்ஸாமினர் வந்து நின்றதும் ‘எஸ்.. சொல்லுங்க’ என்று ஆரம்பித்து அவர் பண்ணுகிற சேட்டை அதகளம். ஒரு பெரிய ரவுண்டுக்கு ரெடியாகுங்க ப்ரோ!

தம்பியால் அண்ணன் ஒவ்வொரு முறை மண்டை காயும்போதும், அதை அப்பாவின் கோணத்தில் பாசக்காட்சிகளாக்கியது நல்ல ஐடியா. அதையே கடைசிக் காட்சியில் வேறு விதமாகப் பயன்படுத்தியிருப்பது கலக்கல்! ஷாலின் சோயாவை விட, வசனங்களே இல்லாமல் கண்ணாலேயே பேசும் கிராமத்து வைஷாலி அழகு!

ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் இரண்டு பாடல்கள் ஆஹா ரகம். ‘எதுத்த வீட்டு காலிஃப்ளவரே’ மெட்டும், வரிகளும், காட்சியமைப்பும் சபாஷ் போடவைக்கிறது. பின்னணி இசையில் இன்னும் நல்ல பயிற்சி தேவை சாரே.. பல காட்சிகளில் நாடக இசை கேட்ட உணர்வு.

சீரியலுக்கான கதையை திரைக்கதையாக மாற்றும்போது தேவைப்படுகிற திரைமொழி சில இடங்களில் மிஸ்ஸிங். ஷாலின் சோயா வீடு சம்பந்தப்பட்ட காட்சிகளில் அது அப்பட்டமாகத் தெரிகிறது. ’அவ்ளோ லவ் பண்ற பொண்ணுக்கு காலேஜ் விட்டுட்டு வந்த பின்னால ஒரு ஃபோன்கூடவா பண்ணிப் பேசமாட்டான் பையன்?’, ‘கதை எந்த வருஷத்துலப்பா நடக்குது?’ என்று ஒன்றிரண்டு சந்தேகங்கள் வேறு வந்து போகிறது. ஆனால் ஜாலியான ஒரு ஃபீல்குட் மூவியைக் கொடுத்தமைக்காக அந்தக் கேள்வியையெல்லாம் விட்டுவிட்டு போய் சிரித்துவிட்டு வரலாம்!