ஜாக்ஸன் துரை – விமர்சனம்

‘உயிரோட இருக்கறவங்களும், செத்தவங்களும் சேர்ந்து செத்துப்போனவங்களை சாகடிக்கற கதை’ என்று யோசித்ததற்கு ஒருமுறை கைகுலுக்கலாம். ஆனால், அது மட்டுமே கெத்து கொடுத்திருக்கிறதா ஜாக்ஸன் துரைக்கு? பார்க்கலாம்!

சீலம் அருகே உள்ள அயனாவரம் கிராமத்தில் ஜாக்சன் என்கிற பேயால் பொதுமக்கள் அவதிப்படுவதால், அதுபற்றி விசாரிக்கும் பொறுப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிபிராஜ் கைக்கு வருகிறது. ஜம்மென்று புல்லட்டில் அந்த கிராமத்துக்குச் செல்லும் அவர் பேய்களைக் கண்டுபிடிக்கிறாரா.. அழிக்கிறாரா.. மக்களின் பயத்தைப் போக்குகிறாரா என்பதே ஜாக்சன் துரை சொல்லும் கதை.

படத்திலேயே ’பில்டப்புக்கு ஒண்ணும் கொறச்சலில்ல’ என்று கொசுமருந்து எஃபெக்டில் சிபிராஜ் இன்ட்ரோ ஆகிற சீன் சிரிப். ஆனால் அந்த பில்டப்பை நீடிக்காமல், படத்தில் போலீஸ் அதிகாரி சொல்வதை நம்மையே சொல்ல வைக்கிறார் என்பது கடுப். பயமுறுத்துகிற படத்தின் ஜில்ஜில் கூல்கூல் அம்சம் பிந்து மாதவி மட்டுமே எனும்போது அதையாவது கொஞ்சம் ஐஸிங்காக பயன்படுத்தியிருக்கலாம். ம்ஹும். அவருக்கு ஏன் லவ்வு வந்தது என்று தெரியவில்லை. வந்த லவ்வை வெறும் மைசூர்பாக்கை பார்சல் செய்வதோடு நின்றுவிடுகிறார்.

பிந்துமாதவி எனக்குதான் என்று என்ட்ரி ஆகும் கருணாகரனுக்கும் சிபிராஜுக்கும் விட்டலாச்சார்யா காலத்திய போட்டி ஒன்றை வைக்கிறார் பிந்துவின் அப்பா சண்முகசுந்தரம். ‘ஜாக்ஸன் பங்களாவில் ஏழு நாள் இரு’ என்பதே அது. அவர் கருணாகரனுடன் உள்ளே போகும்போது ‘ஆஹா ஆரம்பிக்கிறது அதகளம்’ என்று நினைத்தால், திரிவரை வந்து புஸ்ஸாகிவிடுகிற பட்டாசு கணக்காய் அங்கங்கே தொய்வடைகிறது படம்.

பேய் பங்களாவுக்குள் இருக்கும் கருணாகரனும் சிபிராஜும் இரவெல்லாம் சரக்கு போட்டுவிட்டு நடந்தவற்றை அதை காலையில் மறப்பது என்று கொஞ்சம் லூட்டி அடிக்கிறார்கள். ‘ஏ.. விளையாடாம இப்டி முன்னாடி வாடா’ என்று குட்டிப்பேயை கருணாகரன் கையாளும் விதம், ‘நீ இன்னும் சாவலையா? அப்ப இதெல்லாம் மாவா?’ என்று சிபிராஜ் கருணாரகனைக் கேட்பது, ‘யோவ் சுருளி’ என்று சத்யராஜ் மொட்டை ராஜேந்திரனைக் கலாய்ப்பது என்று அங்கங்கே கொஞ்சம் கலகல. ஆனால் மொத்தப்படத்துக்கும் இது பத்தலையே பாஸ்? சத்யராஜ் ஸ்பெஷாலிட்டியே அந்த நக்கல் நையாண்டிதான் எனும்போது அவரையும் செந்தமிழில் கதைக்க விட்டு ஏமாற்றிவிட்டீர்களே! ஆரம்ப அத்தியாயங்களில் யோகி பாபு சின்னதாகவேனும் சிரிசிரிக்க வைக்கிறார். ஆனால், அதுவும் பல காமெடி படங்களில் அடித்து துவைத்த டெம்ப்ளேட்தான்.

பேய்க்கதையில், இடைவேளைக்குப் பிறகு திடீரென்று சீரியஸான பீரியட் ஃப்ளாஷ்பேக். சத்யராஜின் அசத்தலான என்ட்ரி, ‘முதுகுல இல்ல.. நெஞ்சுல சுடு’ என்று நேஹாவின் தேசபக்தி சென்டிமென்ட் என்று நம்மை கொஞ்சம் நிமிரவைக்கிறார்கள். ஆனால் அதையும் நீடிக்க விடவில்லை.

இயக்குநர் தரணிதரனுக்கு இரண்டாவது படம். சத்யராஜ், சிபிராஜ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் என்று பலமான காஸ்டிங் பிடித்திருக்கிறார். முன்பாதி பில்ட்-அப்புக்கு நேரம் எடுத்துக் கொண்டு, பங்களாவுக்கு நுழையும்வரை ஏதோ ஒன்று இருக்கிறது என்று எதிர்பார்க்க வைக்கிறார். ஆனால், பின்னர் சம்பவம், அசம்பவங்கள் நிகழ்ந்து ‘பேயும் பேயும் யாயாகியரோ’ என்று செம்புலப் பெயல் நீர் போல மகிழ்ந்து குலாவி என்னன்னவோ நடக்கிறது. நமக்குத்தான் பயமோ, திகிலோ எதுவும் வருவேனா என்கிறது!

சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன் இருவரும் வரும்போது ஒலிக்கும் பி.ஜி.எம்மில் சித்தார்த் விபின் ஸ்கோர் செய்கிறார். டைட்டில் ‘மோட்டார் பைக்’ பாடலும் ஓகே ரகம். பேய் பங்களாவை பயமுறுத்திக் காட்டியதில் ஒளிப்பதிவாளர் யுவராஜ் கவர்கிறார்.