என் குணங்கள் பெண்களால் வடிவமைக்கப்பட்டவை ஷாருக்கான் பெருமிதம்

இந்தியாவில் பல்வேறு துறைகளில் பிரபலமான 24 பெண்களின் வாழ்வில் ஏற்பட்ட முக்கிய திருப்புமுனைகளை பதிவு செய்யும் வகையில் அறிமுக எழுத்தாளரான கஞ்சன் ஜெயின் என்பவர் எழுதியுள்ள ’ஷி வாக்ஸ், ஷி லீட்ஸ்’ என்ற தலைப்பிலான புத்தகம் நேற்று மும்பையில் வெளியிடப்பட்டது.

இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய பாலிவுட் நடிகர் ஷாருக் கான் கூறியதாவது;-

எனது வாழ்க்கை முழுவதுமே பெண்களால் வடிவமைக்கப்பட்டதாகும். எனது பாட்டியில் இருந்து தொடங்கி தற்போது எனது மகள்வரை, இடையில் என் மனைவி, அத்தைகள், மாமிகள், நாங்கள் வசித்த பகுதியில் இருந்த சகோதரிகள், என்னுடன் திரையுலகில் பணியாற்றியவர்கள் போன்றவர்கள்தான் என்னை வாழ்க்கையில் இயக்கிய முக்கியமானவர்கள்.

நான் இன்று என்னவாக இருக்கிறேனோ..,? இந்த நூறு சதவீதத்தை அடைய அவர்கள் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். இந்தப் பெண்கள் எல்லாம் இல்லாவிட்டால் நான் பாதி மனிதனாககூட இருந்திருக்க மாட்டேன். இவர்களுக்கெல்லாம் நான் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

எனக்குள் இருக்கும் நல்லுணர்வுகள், நல்லகுணம் ஆகியவை எனது வாழ்க்கையில் நான் சந்தித்த பெண்களால் வடிவமைக்கப்பட்டவை ஆகும். அந்தப் பெண்களைப் பற்றி என்றாவது ஒருநாள் ஒரு புத்தகம் எழுத விரும்புகிறேன்.