ஒன்பதிலிருந்து பத்து வரை – விமர்சனம்

கால் டாக்சி ஓட்டுனரான நாயகன் கதிர், ரேடியோ ஜாக்கியான நாயகி ஸ்வப்னாவின் குரலை கேட்டு அவரது தீவிர ரசிகர் ஆகிறார். ஒருநாள் ஸ்வப்னா, கதிரின் காரில் பயணம் செய்கிறாள். பயணத்தின்போது ஸ்வப்னா ரேடியோ ஜாக்கி என்று தெரியாத கதிர், அவளிடம் கடுப்பாக நடந்து கொள்கிறான். இதனால், இவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது.

ஒருகட்டத்தில் கதிர் தன்னுடைய ரசிகர் என்பதை தெரிந்துகொள்கிறார் ஸ்வப்னா. இதனால், கதிரிடம் அன்பாக பேசுகிறார். இதை கதிர் காதல் என்று தவறுதலாக புரிந்துகொள்கிறார். அதேநேரத்தில், சிட்டியில் நடந்துவரும் தொடர் கொலை விஷயமாக சிட்டி போலீஸ் கமிஷனரான சரவண சுப்பையா, ஹீரோவை தேடுகிறார்.

இந்நிலையில், ஸ்வப்னா ஹீரோவின் காரில் பயணமானது அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காகத்தான் சென்றது என்பதை கதிர் அறிகிறார். இதையறியும் கதிர், ஸ்வப்னாவின் மொத்த குடும்பத்தையும் தனது காரில் கடத்துகிறார். இப்படி ஏகப்பட்ட சிக்கல்களுடன் பயணிக்கும் கதையில், இறுதியில், ஸ்வப்னாவை கதிர் கரம்பிடித்தாரா? அவரை எதற்காக கடத்தினார்? தொடர் கொலைகளுக்கும் கதிருக்கும் என்ன சம்பந்தம்? என்பதை விறுவிறுப்பாக சொல்ல வந்திருக்கிறார்கள்.

கதிர் ஏற்கெனவே ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இது இவருக்கு இரண்டாவது படம். இப்படத்திலும் நடிப்பை வரவழைக்க ரொம்பவும் முயற்சி செய்திருக்கிறார். டப்பிங்கில் இவரது குரல் காமெடியாகவே இருக்கிறது. நாயகி ஸ்வப்னா மேனன், ரேடியோ ஜாக்கி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். பார்க்கவும் அழகாக இருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் சிரமப்பட்டிருக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் இயக்குனர் சரவண சுப்பையா, கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருந்தாலும் மிகையான நடிப்பால் அவரை ரசிக்க முடியவில்லை. அரசியல்வாதியாக வரும் லிவிங்ஸ்டன் கலகலப்பூட்டியிருக்கிறார். மற்றபடி, படத்தில் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்கள் மட்டுமே உள்ளன. அவர்களும் பெரிதாக மனதில் பதியவில்லை.

பயணத்தை மையமாக வைத்து ஒரு திரில்லான படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் விஜய் சண்முகவேல் அய்யனார். திரில்லாங்கான ஒரு கதையை திரில்லாக ரசிக்க முடியவில்லை. சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்யாதது இதற்கு காரணம். மேலும், படத்தில் சில லாஜிக் மீறல்களும் இருக்கின்றன. இதையெல்லாம் தவிர்த்தால் படம் நன்றாக இருந்திருக்கும்.

எம்.கார்த்திக்கின் பின்னணி இசை மிரட்டியிருக்கிறது. ராஜரத்தினம் ஒளிப்பதிவும் படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.