துபாய் ராணி – விமர்சனம்

துபாய் செல்வதற்காக மும்பை வரை சென்று ஏமாற்றப்பட்ட நிலையில், மும்பையில் சிலகாலம் வாழ்ந்துவிட்டு தனது சொந்த ஊரான ஐதராபாத்துக்கே திரும்பி வருகிறார் நாயகன் ரவிதேஜா. மும்பையில் தான் காதலித்த நயன்தாரா ஐதராபாத்தில் இருப்பதை அறிந்து, அவளை தேடி அலைகிறார். ஒருகட்டத்தில் ரேடியோ ஜாக்கியாக இருக்கும் நயன்தாராவை கண்டுபிடித்து, தனது காதலை உறுதிபடுத்துகிறார் ரவிதேஜா.

இதற்கிடையில், ஐதராபாத்தின் மிகப்பெரிய தாதாவான ஜின்னா பாய், போலீசுக்கு பயந்து மும்பையில் தலைமறைவாக இருக்கிறார். இதை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட அவரிடம் வேலைபார்த்த மக்கா நாயக், தனக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு ஐதராபாத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைக்கிறார். இது ஜின்னா பாயின் ஆட்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. இதனால், இரண்டு கோஷ்டிக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்படுகிறது.

இந்நிலையில், தனக்கு எதிராக செயல்பட்டு வரும் மக்கா நாயக்கை தீர்த்துக்கட்ட ஜின்னா பாய் முடிவெடுக்கிறார். இதற்காக மும்பையிலிருந்து ஐதராபாத் திரும்புகிறார். ஜின்னா பாய் ஐதராபாத் திரும்புவதை பற்றி அறியும் போலீசார் அவரை எப்படியாவது கைது செய்யவேண்டும் என தீவிரமாக இருக்கின்றனர்.

அவர்களையும் மீறி ஐதராபாத்திற்குள் நுழையும் ஜின்னா பாய், மக்கா நாயக்கின் தம்பியை கடத்தி வைத்துக் கொண்டு தன் பெயரை சொல்லி சம்பாதித்த பணத்தை தன்னிடம் ஒப்படைக்கும்படி எச்சரிக்கிறார். மக்கா நாயக்கும் தனது தம்பியை மீட்பதற்காக அந்த பணத்தை ஒருவனிடம் கொடுத்து அனுப்புகிறார். ஆனால், அவன் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு இடத்தில் வைத்துவிட்டு, ஜின்னா பாயின் அழைப்புக்காக காத்திருக்கிறான். இதற்குள், ஜின்னா பாய், மக்கா நாயக்கையும், அவனது தம்பியையும் கொன்றுவிடுகிறார். இதையெல்லாம் போலீஸ் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது.

இதனால், பணம் எடுத்துச் சென்றவனுக்கு ஜின்னா பாய் போன் செய்து, போலீசுக்கு சந்தேகம் வராத ஆள் மூலமாக அந்த பணத்தை கொடுத்துவிடுமாறு கூறுகிறார். அதன்படி, நாயகன் ரவிதேஜா அந்த பணத்தை ஜின்னா பாயிடம் ஒப்படைக்க புறப்பட்டு செல்கிறார். ஜின்னா பாயிடம் சென்று பணத்தை ஒப்படைக்கும் ரவிதேஜா, திடீரென்று மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, அங்குள்ள அனைவரையும் சுட்டுத் தள்ளுகிறார். இதில் அனைவரும் இறந்துபோக ஜின்னா பாய் மட்டும் கையில் குண்டு காயத்துடன் தப்பிக்கிறார்.

ரவிதேஜா, ஜின்னா பாயின் ஆட்களை சுட்டுக் கொல்ல காரணம் என்ன? ஜின்னா பாயுக்கும், ரவிதேஜாவுக்கும் அப்படி என்ன பகை இருந்தது? என்பதை விளக்கிச் சொல்கிறது பின்பாதி.

தெலுங்கில், துபாய் சீனு என்ற பெயரில் வெளிவந்த படமே ‘துபாய் ராணி’ என்ற பெயரில் தமிழில் வெளிவந்திருக்கிறது. நாயகன், ரவிதேஜா இப்படத்தில் காதல், காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன் என எல்லாவற்றிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். படத்தில் இவருக்கென்று நிறைய மாஸ் காட்சிகளும் இருக்கின்றன. வசனங்களும் ரசிகர்களை கவர்ந்திழுக்கும்படி வைத்திருப்பது சிறப்பு.

நயன்தாராவும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். பிரம்மானந்தம் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக இருக்கிறது. போலீஸ் அதிகாரியாக வரும் சாயாஜி ஷிண்டே தனக்கே உரித்த ஸ்டைலில் கலக்குகிறார்.

காதல், செண்டிமெண்ட், ஆக்ஷனுடன் தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்தமாதிரி காரசாரமான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்
இயக்குனர் ஸ்ரீனு வைத்லா. ஆனால், தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு இது தமிழ் ரசிகர்களை கவருமா? என்பதுதான் கேள்வி.

மணிசர்மாவின் இசையில் பாடல்கள் ஆட்டம் போடவைக்கின்றன. பின்னணி இசையும் கதையின் ஓட்டத்துக்கு உதவியிருக்கிறது. பரணி கே.தரணின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.