அதிரடி அர்ஜுன் – விமர்சனம்

கிராமத்தில் பள்ளி தலைமையாசிரியராக இருக்கும் நாசரின் மகன் ரவிதேஜா. படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் போகாமல் கிராமத்தில் நண்பர்களுடன் சேர்ந்து வம்பிழுத்து வருகிறார் ரவி தேஜா. இதனால் அவரை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார் அவரது அம்மா. சென்னையில் வேலை தேடி அலையும் ரவிதேஜாவுக்கு சிறிய டிவி கம்பெனியில் வேலை கிடைக்கிறது.

சென்னையில் ஒருநாள் நயன்தாராவை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் ரவிதேஜா, அன்றுமுதல் நயன்தாராவை காதலிக்க தொடங்குகிறார். பல்வேறு சந்திப்புகளுக்கு பிறகு ரவிதேஜாவின் நடவடிக்கைகள் பிடித்துப்போகவே நயன்தாராவும் அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார்.

இந்நிலையில், உள்துறை மந்திரியான காதல் தண்டபாணியின் ஊழல்களை ஒருவர் பட்டியலிட்டு போலீசில் ஒப்படைக்க பார்க்கிறார். இதை அறியும் தண்டபாணி, எம்.எல்.ஏ. மூலமாக அவனை தீர்த்துக்கட்ட லோக்கல் ரவுடியான சோனு சூத்தை நியமிக்கிறார். சோனு சூத், அவனை கொலை செய்ய முயற்சி செய்யும்போது, மற்றொரு லோக்கல் ரவுடியான கோட்டா சீனிவாசராவ் உள்ளே புகுந்து கலைத்துவிடுகிறார். இதனால், இரண்டு பேர் கூட்டத்துக்கும் பிரச்சினை ஏற்படுகிறது.

மறுமுனையில், ரவிதேஜா பணிபுரிந்துவரும் டிவி கம்பெனி ஒன்றுக்கும் உதவாத நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அதே கம்பெனியில் வேலை செய்துவரும் ஒருவர் மக்களுக்கு பயன்தரும்படியான ஏதாவது ஒரு செய்தியை ஒளிபரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான பிரகாஷ் ராஜுடன் நேரடி பேட்டி ஒன்றை எடுக்கின்றனர். ரவிதேஜாவின் முன்னிலையில் இது நடக்கிறது.

அந்த பேட்டியில் தான் ஓய்வு பெறுவதற்கு காரணம் சோனு சூத்தின் ஆட்களின் அட்டகாசம்தான் என்பதை போட்டு உடைக்கிறார் பிரகாஷ்ராஜ். இதை பார்த்துக்கொண்டிருக்கும் சோனு சூத், பிரகாஷ் ராஜை அடித்து உதைக்க ஆட்கள் அனுப்புகிறார். அவர்களிடமிருந்து பிரகாஷ்ராஜை காப்பாற்றுகிறார் ரவிதேஜா.

இதனால், சோனுசூத்தின் ஆட்கள் ரவிதேஜாவை தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறார்கள். இதிலிருந்து ரவிதேஜா தப்பித்தாரா? சோனுசூத் மற்றும் உள்துறை மந்திரியின் தில்லுமுல்லு வேலைகளுக்கு சரியான தண்டனை கிடைத்ததா? என்பதுதான் மீதிக்கதை.

ரவிதேஜா வழக்கம்போல் இந்த படத்திலும் குழந்தைத்தனமான நடிப்பு, ஆக்ஷன், என அனைத்திலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். நயன்தாராவுடனான காதல் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. அதேபோல், ஆக்ஷன் காட்சிகளில் அனல் பறக்கிறது.

நயன்தாரா இப்படத்தில் நாயகனை காதலிக்க மட்டுமே பயன்பட்டிருக்கிறார். நேர்மையான அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ் தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார். பேட்டியளிக்கும் காட்சிகளில் எல்லாம் எதார்த்தத்துடன் நடித்திருக்கிறார். சோனு சூத் வில்லனாக மிரட்டுகிறார். நாசர் பொறுப்பான அப்பாவாக மனதில் பதிகிறார். மற்றொரு தாதாவாக வரும் கோட்டா சீனிவாசராவும் தனக்கே உரித்தான ஸ்டைலில் நடித்து அசத்தியிருக்கிறார்.

தெலுங்கில் பல்வேறு ஹிட் படங்களை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம்தான் இது. தெலுங்கில் ஆஞ்சநேயலு என்ற பெயரில் வெளிவந்த இப்படம் தமிழில் அதிரடி அர்ஜுன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வந்துள்ளது. தெலுங்கு ரசிகர்களை இப்படம் பெரிதளவில் கவர்ந்தாலும், சில இடங்களில் தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் காட்சிகள் இல்லாதது படத்திற்கு குறைவே.

தமனின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. ரவீந்திரபாபுவின் ஒளிப்பதிவு கதைக்கேற்றவாறு சிறப்பாக அமைந்திருக்கிறது.