பட விழாக்களை புறக்கணிக்கும் நாயகிகள்

புதிதாக தயாராகும் தமிழ் படங்களை விளம்பரப்படுத்த அதன் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாக்களை நடிகர்-நடிகைகள் மற்றும் டைரக்டர்களை அழைத்து நட்சத்திர ஓட்டல்களிலும், தியேட்டர்களிலும் தயாரிப்பாளர்கள் நடத்தி வருகிறார்கள். இந்த விழாக்களுக்கு விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களும் அழைக்கப்படுவது உண்டு.

இது படத்தின் வியாபாரத்துக்கு உதவும் என்று பட அதிபர்கள் எதிர்பார்க்கிறார்கள். கடந்த காலங்களில் பல படங்களுக்கு அதில் நடிக்காத நடிகர் நடிகைகள் வந்தும் வாழ்த்தி விட்டு போய் இருக்கிறார்கள். ஆனால் சமீப காலமாக படங்களில் நடித்தவர்கள் கூட அவர்களின் பட விழாக்களுக்கு வருவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தி, தெலுங்கு பட உலகில் இதுபோன்ற படவிழாக்களில் நடிகர்-நடிகைகள் கலந்து கொள்வது கட்டாயமாக இருக்கிறது. கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. தமிழ் பட உலகில் அந்த நிலைமை இல்லை. படவிழாக்களை புறக்கணிக்கும் கதாநாயகிகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று ஏற்கனவே வற்புறுத்தப்பட்டது.

கதாநாயகிகளின் மொத்த சம்பளத்தில் 20 சதவீதத்தை பிடித்தம் செய்து வைத்துக்கொண்டு அதில் 10 சதவீதத்தை அவர்கள் டப்பிங் பேசி முடித்த பிறகு கொடுக்க வேண்டும் என்றும் மீதி 10 சதவீதத்தை பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாக்கள் போன்று படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்து கொண்ட பிறகு வழங்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் யோசனைகள் தெரிவிக்கப்பட்டன. அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

பட விழாக்களை புறக்கணிக்காமல் கதாநாயகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் பலர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். ஆனால் சில நடிகைகள் கண்டு கொள்வது இல்லை. நயன்தாரா, அவர் நடித்து வெளிவந்த இது நம்ம ஆளு, தனி ஒருவன், படவிழாக்களில் கலந்து கொள்ளவில்லை. ஜீவா ஜோடியாக நடிக்கும் திருநாள் படவிழாவுக்கும் வரவில்லை. சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த இருமுகன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிலும் பங்கேற்காமல் புறக்கணித்தார். இதில் விக்ரம் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இதே படத்தில் நடித்துள்ள நித்யாமேனனும் விழாவுக்கு வரவில்லை. விஜய்சேதுபதி, தமன்னா ஜோடியாக நடித்துள்ள தர்மதுரை படத்தின் பாடல் வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்ளாமல் தமன்னா புறக்கணித்து விட்டார்.

ரஜினிகாந்தின் கபாலி பட விழா நடந்த போது அதில் கதாநாயகியாக நடித்த ராதிகா ஆப்தே கலந்து கொள்ளவில்லை. இதற்காக அவர் வருத்தம் தெரிவித்து இருந்தார். சூர்யாவின் 24 பட விழாவில் அதில் கதாநாயகியாக நடித்த சமந்தா கலந்து கொள்ளவில்லை

காஜல் அகர்வால், திரிஷா உள்பட மேலும் பல கதாநாயகிகள் ஒருசில விழாக்களை தவிர பல படவிழாக்களில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டனர். கதாநாயகிகளை விழாக்களில் கண்டிப்பாக பங்கெடுக்க செய்வதற்கான வழிமுறைகள் குறித்து திரையுலக சங்கத்தினர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.