தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் – விமர்சனம்

ஜெய் கல்லூரி படிப்பை பாதியிலே முடித்துவிட்டு ஊரிலிருந்து வேலை தேடி சென்னைக்கு வருகிறார். சென்னை வரும் ஜெய் தனது மாமா விடிவி கணேஷுடன் தங்கிக் கொண்டு, அவர் சொல்லும் ஒவ்வொரு வேலைக்கும் சென்றுவிட்டு, பாதியிலேயே அந்த வேலை பிடிக்கவில்லை என்று சொல்லி திரும்பி வருகிறார்.

இந்நிலையில், ஜெய் கொரியர் கம்பெனியில் வேலை பார்க்கும் நண்பன் சந்தானத்துடன் சேர்ந்துகொண்டு அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் இவரும் கூடவே சென்று வருகிறார். அப்போது, ஒருநாள் நாயகி யாமி கௌதமை பார்க்கும் ஜெய் அவள்மீது காதல் வயப்படுகிறார். அவளை தினமும் சந்திப்பதற்காக அவள் இருக்கும் ஏரியாவில் கொரியர் சப்ளை செய்யும் பணிக்கு சேர்கிறார். கொரியர் சப்ளை செய்வதுபோல் அவளை தினமும் சந்தித்து தனது காதலை வளர்க்கிறார்.

ஒருகட்டத்தில் யாமி கௌதமும் ஜெய் மீது காதல்வயப்படுகிறார். இதற்கிடையில், சென்னையில் மிகப்பெரிய டாக்டரான அஸ்டோஸ் ரானா, சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு வேலைகளை செய்து, அந்த கருமுட்டைகளை வெளிநாட்டுக்கு விற்பனை செய்து அதன்மூலம் பல கோடிகள் சம்பாதித்து வருகிறார்.

இதை அறியும் தம்பி ராமையா, ராணாவை நேரடியாக எதிர்க்கமுடியாது என்பதற்காக சமூக ஆர்வலான நாசரின் உதவியை நாடுகிறார். ராணா செய்துவரும் தில்லுமுல்லுகள் பற்றிய விவரங்களை சேகரித்து அதை நாசருக்கு கொரியர் மூலம் அனுப்பி வைக்கிறார்.

அந்த விவரங்கள் அடங்கிய பார்சலை சப்ளை செய்யும் பொறுப்பு ஜெய்க்கு வருகிறது. மறுபுறம் தம்பி ராமையா தன்னைப் பற்றிய விவரங்களை பார்சலாக அனுப்பிய விஷயம் ராணாவுக்கு தெரிய வருகிறது. அது நாசரிடம் சென்றடையாமல் எப்படி தடுப்பது என்ற முயற்சியில் இறங்குகிறார்.

இறுதியில், நாசரின் கைக்கு அந்த பார்சல் கிடைத்ததா? அல்லது, அந்த பார்சலை அடைவதற்கு ராணா எந்தமாதிரியான முயற்சிகளை எடுத்தார்? என்பதே மீதிக்கதை.

ஜெய் ஹீரோயிசம் இல்லாத ஹீரோவாக மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். இந்த படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்தாலும் ஜெய்யின் நடிப்பு ரசிக்கும்படியாகவே இருக்கிறது. நாயகியை பார்ப்பதற்காக இவர் செய்யும் வேலைகள் எல்லாம் ரசிக்கும்படி இருக்கிறது.

பாலிவுட் வரவான நடிகை யாமி கௌதமுக்கு இப்படத்தில் பெரியதாக வேலை இல்லாவிட்டாலும் தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்திருக்கிறார். விடிவி கணேஷ், சந்தானம் ரெண்டு பேரும் படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல உதவியிருக்கிறார்கள். சந்தானம் அடிக்கும் கவுண்டர் வசனங்கள் அனைத்தும் புதிதாக கேட்பதுபோலவே இருப்பது சிறப்பு.

டாக்டராக அஸ்டோஸ் ராணாவின் நடிப்பு மிரட்டும்படியாக இல்லை. அவருடைய கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம். நாசர், சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா ஆகியோரின் அனுபவ நடிப்பு படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்த்திருக்கிறது.

சட்டத்திற்கு புறம்பாக செய்யப்படும் கருக்கலைப்புக்கு பின்னணியில் மிகப்பெரிய வியாபாரம் இருப்பதாக இப்படத்தில் இயக்குனர் பிரேம் சாய் சொல்ல வந்திருக்கிறார். சொல்ல வந்த கதையை தெளிவாகவும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். குழப்பும்படியான காட்சிகளை அமைக்கமால், ரசிகர்களை எளிதாக சென்றடைய என்னென்ன செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்திருக்கிறார். படத்தின் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சிறப்பாக அமைத்திருக்கலாம்.

கார்த்திக் இசையில் பாடல்கள் அழகாக இருக்கிறது. சந்தீப் கௌடாவின் பின்னணி இசையும் சூப்பர். சத்யா பொன்மாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் எல்லாம் கலர்புல்லாக இருக்கிறது.

மொத்தத்தில் ‘தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ மனதில் இடம்பெறும்