திருநாள் – விமர்சனம்

ஜீவா நடிப்பில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மிகுந்த எதிர்ப்பார்ப்பில் வெளிவந்துள்ள படம் திருநாள். இதற்கு முக்கிய காரணம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் கூட, ஈ என்ற பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஜீவா-நயன்தாரா கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளது, இப்படத்தை ராம்நாத் இயக்க, ஸ்ரீ இசையமைத்துள்ளார்.

தஞ்சாவூர் கும்பக்கோணம் இந்த இரண்டு ஊரிலும் நாகா(சரத்) வைத்தது தான் சட்டம், ஒரு முறை அவர் உயிரை பறிக்க வருபவனை கொன்று ஜீவா நாகாவிடம் நற்பெயரை சம்பாதித்து அந்த கூட்டத்தில் ஒருவனாகின்றான்.

எதற்கு எடுத்தாலும் வெட்டுக்குத்து என ஜீவா யார் பேச்சையும் கேட்காமல் நாகா சொல்வதை மட்டும் கேட்டு, பல அநியாய வேலைகளை பார்க்கிறார், கிட்டத்தட்ட ஒரு கடவுள் போல் நாகவை ஜீவா பார்த்து வருகிறார்.ஒருக்கட்டத்தில் நாகா, தன்னை வெறும் கூலிக்காக மட்டுமே தான் பயன்படுத்துகிறார் என தெரியவர, இனி சண்டை எதுவும் வேண்டாம் என ஜீவா ஒதுங்கி இருக்கிறார், ஆனால், எங்கு சென்றாலும் தன்னை பிரச்சனைகள் சூழ்ந்து நிற்க ஜீவா மீண்டும் அருவாளை எடுக்க, போகப்போகும் உயிர் ஜீவாவா? நாகாவா? என்பதே மீதிக்கதை.

ஜீவா இதே பாணியில் ரௌத்திரம் என்ற படத்தில் நடித்துள்ளார், என்ன அதில் முழுக்க முழுக்க நல்லவனாகவே நடித்திருப்பார், இதில் கொஞ்சம் நெகட்டி ஷேட்ஸ், ஆனால், எந்த கதாபாத்திரம் என்றாலும் ஜீவா அப்படியே பொருந்தி விடுகிறார், ப்ளேடை வாயில் கடித்து துப்பும் போது, நயன்தாரா காப்பாற்ற வில்லன்களிடம் சண்டைப்போடும் போது தூள் கிளப்புகிறார், அதே சமயம் நாகாவிடம் உயிர்பிச்சை கேட்டு அழும் போதும் மனதை தொடுகிறார்.

நயன்தாரா ஆரம்பத்தில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்பது போல் தெரிந்தாலும் போக போக கதைக்குள் பொருந்திவிடுகிறார், எந்த ஒரு படத்திற்கும் வில்லன் எத்தனை பலமாக இருக்கிறாரோ, அந்த அளவிற்கு திரைக்கதை வலுவாகும், இதில் வில்லன் பலமாக இருந்தாலும் திரைக்கதை தடுமாறுகிறது.

எப்போதும் வில்லன் என்றால் எதிராளிகளுக்கு தான் பயன் வரும், அவர்கள் குடும்பத்திற்கு தான் ஆபத்து வரும், ஆனால், சரத் தன் கூடவே இருப்பவர்கள் குடும்பத்திற்கு கூட குழியை பறிக்கிறார், அந்த அளவிற்கு கொடூரமாக இவரின் கதாபாத்திரம் சித்திரிக்கப்பட்டுள்ளது.கத்தி எடுத்தவன் கதை கத்தியில் முடியும் என்பதே படத்தின் மையக்கதை என்றாலும் இத்தனை வன்முறை காட்சிகள் தேவையா? ஸ்கிரினை தாண்டி நம் மேல் இரத்தம் தெரிக்கின்றது.

என்கவுண்டர் ஸ்பெலிஸ்ட்டாக வரும் கோபிநாத் சில நேரங்கள் வந்தாலும் நன்றாக நடித்துள்ளார், ஆனால், பெரிய பில்டப் கொடுத்து அவருக்கும் கிளைமேக்ஸில் வேலையில்லாமல் செய்துவிட்டார்கள். மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு தஞ்சாவூர், கும்பக்கோணம், திருச்சி என மூன்று ஊர்களையும் லைவ்வாக படப்பிடித்து காட்டியுள்ளது, படத்தில் பாதி நேரம் இரவு நேர காட்சிகள் தான், சவலான காட்சிகளையும் அழகாக படம்பிடித்துள்ளார், ஸ்ரீயின் இசையின் பழையசோறு பாடல் மட்டுமே ரசிக்க வைக்கின்றது, பின்னணி இசை காதை பதம் பார்க்கின்றது.

ஜீவாவின் கதாபாத்திர அமைப்பு, எந்த இடத்திலும் காம்ப்ரேமேஸ் ஆகாமல் நடித்துள்ளார், அவருக்கு இணையாக வில்லனாக சரத் மிரட்டியுள்ளார்.கருணாஸ், கோபிநாத், நயன்தாரா அப்பாவாக வரும் ஜோ மல்லோரி ஆகியோர் யதார்த்தமாக நடித்துள்ளனர்.

என்ன தான் அடியாட்களாக இருந்தாலும் அவர்களுக்கும் ஒரு மனது இருக்கின்றது, என்பதை ஜீவாவை வெட்ட வருபவர், ‘நீ நல்ல வாழனும்யா’ என்று கூறி வெட்டாமல் செல்லும் காட்சி ரசிக்க வைக்கின்றது.