மாணவர்களின் காதல் மோதல் ”கல்லூரி பறவைகள்” சீரியல்

புதுயுகம் தொலைக்காட்சியில் ‘கல்லூரி பறவைகள்’ என்ற புத்தம் புதிய இளமை தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கி உள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான நட்பு, நேசம், கலகலப்பு, காதல், மோதல், பிரிவு, போராட்டங்களை இளமை துள்ளலுடன் விவரிக்கிறது புத்தம்புதிய மெகா தொடரான கல்லூரி பறவைகள்.

கல்லூரி என்பது பறவைகள் சங்கமிக்கும் சரணாலயம் போன்றது. எங்கோ பிறந்த மாணவ, மாணவியர்கள் கல்லூரியில் ஒன்றுகூடி சுதந்திரமாக சுற்றித்திரிகிறார்கள். வானத்தை தாண்டியும் பறக்க நினைக்கும் மாணவர்களுக்கு இந்தக் கல்லூரி காலம்தான் வசந்தகாலம்.

பெற்றோரை விபத்தில் பறிகொடுத்தவள் நந்தினி. அந்த விபத்தில் பேச்சை இழந்துவிட்ட தம்பியை குணப்படுத்துவதற்காக கிராமத்தில் இருந்து மும்பைக்கு வருகிறாள்.

மும்பையில் செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே படிக்கும் ஒரு பிரபலமான கல்லூரியில், ஸ்காலர்ஷிப்பில் படிக்கும் வாய்ப்பு நந்தினிக்கு தற்செயலாக கிடைக்கிறது. அந்தக் கல்லூரியின் நிர்வாகியின் மகனான மாணிக்கும் அவனுடைய நண்பர்களும் சேர்ந்து கல்லூரி மாணவர்களை ஆட்டிப் படைக்கிறார்கள்.

யாராலும் தட்டிக்கேட்க முடியாத பெரிய இடத்துப் பிள்ளைகளைக் கண்டு அத்தனை மாணவர்களும் அஞ்சி நடுங்குகிறார்கள். அந்த அராஜக மாணவர் குழுவின் தலைவன் மாணிக்குடன் நந்தினிக்கு மோதல் உண்டாகிறது.

யாரும் எதிர்பாராதவகையில் மாணிக்கை அடித்துவிடுகிறாள் நந்தினி. அதனால் நந்தினியை பழிவாங்கவும், கல்லூரியில் இருந்து வெளியேற்றவும் மாணிக் துடிக்கிறான். அவன் கோபத்தை நந்தினி தாக்குப்பிடித்து கல்லூரியில் நீடிக்க முடியுமா என்பதை, கல்லூரி பறவைகள் தொடரில் கண்டுகளியுங்கள்.

இந்தத் தொடரின் நாயகி நந்தினியாக பிரபல நடிகை நிட்டி டெய்லர், நாயகனாக பார்த் சம்தானும் நடிக்கிறார்கள். இவர்களைத் தவிர வீபா ஆனந்த், அஜஸ் அகமது, சார்லி சவுகான், கரன் ஜோத்வானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.00 மற்றும் 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதன் மறுஒளிபரப்பை மறுநாள் பகல் 1.30 மணிக்கும், வாராந்திர தொகுப்பை வாரத்தின் இறுதியிலும் ஒளிபரப்பாகிறது.