கவலை வேண்டாம் விமர்சனம்

முதல் பட வெற்றிக்குப் பின் இரண்டு ஆண்டுகள் கழித்து இரண்டாவது படத்தை எடுத்திருக்கும் இயக்குனர் டீகே, கட்டாயம் ஒரு வெற்றிப் படம் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கும் ஜீவா இருவரும் இணைந்திருக்கும் படம் ’கவலை வேண்டாம்’. லாஜிக்கை மறந்து காமெடியை நம்பிக் களமிறங்கியிருக்கிறார்கள். கவலைகள் மறக்குமா என்பதை விமர்சனத்தில் தெரிந்துகொள்ளலாம்.

அரவிந்த் (ஜீவா), திவ்யா (காஜல் அகர்வால்). நட்ராஜ் (ஆர்ஜே பாலாஜி), சதீஷ் (பாலா சரவணன்) ஆகியோர் ஊட்டியில பள்ளியில் ஒன்றாகப் படித்த நண்பர்கள். அரவிந்தும் திவ்யாவும் காதலித்து திருமணம் செய்துகொள்கின்றனர். திருமணம் ஆன ஒரு சில நாட்களில் அரவிந்தைப் பிடிக்காமல் பிரிந்து செல்கிறாள் திவ்யா. அர்ஜுன் (பாபி சிம்ஹா) என்ற பணக்கார இளைஞனுடன் திருமணம் நிச்சயமாகிறது.

மறுமணத்துக்கு முன் அரவிந்திடம் விவாகரத்து பெற மீண்டும் அவனிடம் வருகிறாள் திவ்யா. ’விவாகரத்து தர வேண்டுமென்றால் என்னுடன் ஒருவாரம் மனைவிபோல் தங்க வேண்டும் ஆனால் உன் மீது என் விரல் கூட படாது’ என்று நிபந்தனை விதிக்கிறான் அரவிந்த். நீதிமன்றத்துக்கு சென்றால் ஒரு வருடம் அவனுடன் இணைந்து வாழ வேண்டிவரும் என்பதற்காக வேறு வழியில்லாமல் அவனுடன் இருக்க சம்மதிக்கிறாள் திவ்யா. அவர்களுடன் அரவிந்தின் நண்பர்களும் இருக்கிறார்கள். அரவிந்தை ஒரு தலையாகக் காதலிக்கும் தீபா (சுனைனா) என்ற தோழியும் அவ்வப்போது வந்து செல்கிறாள்.

அந்த ஒருவாரத்தில் நடப்பது என்ன. அரவிந்தும் திவ்யாவும் சேர்ந்தார்களா பிரிந்தார்களா என்பதே மீதிக் கதை.
கதை தொடங்குவதே நாயகி தன் காதல், திருமண வாழ்க்கை பிரிவு ஆகியவைப் பற்றி தன் தோழியிடம் கதை சொல்வதுபோல் வருகிறது. ஆங்காங்கே காட்சிகளை வைத்தும் முன்கதை சொல்லப்படுகிறது. ஆனால் ’இந்த முன்கதையை காட்சிகளாக மட்டும் காண்பித்திருக்கலாமே எதற்கு சொல்ல(வும்) வேண்டும்’ என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கதையோ லாஜிக்கோ பெரிதாக இல்லை என்றாலும் நிறைய ரசித்து சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளால் முதல் பாதி கலகலப்பாகக் கடந்துவிடுகிறது. குறிப்பாக ஜீவாவும் ஆர்ஜே பாலாஜியும் போலீஸ் ஸ்டேஷனில் சிக்கிக்கொள்ளும் காட்சியிலும் பாலா சரவணன் 10-15 பேரிடமும் ஒரே இடத்தில் மிதி வாங்கும் காட்சியிலும் எழும் சிரிப்பொலியில் தியேட்டரே குலுங்குகிறது.

கதை என்பதற்கு பெரிதாக மெனக்கெடாததன் பிரச்சனை இரண்டாம் பாதியில் பெரிதாகத் தெரிகிறது. முடிவுல் என்ன நடக்கும் என்று தெரிந்துவிடுவதாலும் கதையில் ஏற்படும் சிக்கல்களில் பெரிய அழுத்தம் எதுவும் இல்லாததாலும் திரைக்கதையுடன் ஒன்ற முடியவில்லை. கதாபாத்திரங்களோ அவர்களுக்கிடையிலான உறவுகளோ போதுமான அளவு அறிமுகப்படுத்தப்படாததால் திரையில் அவர்களுக்கு நடப்பவை பார்ப்பவரை பாதிக்கத் தவறுகின்றன. ஆங்காங்கே வரும் சில காமடிக் காட்சிகள்தான் இரண்டாம் பாதியை உட்கார்ந்து பார்க்க வைக்கின்றன.

கதையை நகர்த்துவதற்காக ஆங்காங்கே எமோஷனல் மதிப்பைக் கூட்டுவதற்காக சில காட்சிகளை வேண்டுமென்றே சேர்த்திருப்பதுபோன்ற உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. நாயகியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடக்கும் களேபரம், நாயகியின் அம்மாவுக்கு மாரடைப்பு வருவது போன்ற விஷயங்கள் எமோஷனல் காட்சிகளுக்குத் தேவையான அழுத்தத்தைக் கொண்டிருக்கவில்லை. கடைசி 20 நிமிடக் காட்சிகள் எமோஷனல் அழுத்தத்தைக் கூட்ட வேண்டும் என்பதற்காக திணிக்கப்பட்டவை போல் இருக்கின்றன.

பெரும்பாலான பாத்திரப் படைப்புகள் சொதப்பலாகியிருக்கின்றன. படத்தில் ரசிக்கத்தக்க பாத்திரமாக வருவது நாயகனின் அப்பாவாக வரும் மயில்சாமி. நாயகன் ஜீவாவின் பாத்திரம் அப்படியே அவரது ‘என்றென்றும் புன்னகை’ பாத்திரத்தை நினைவுபடுத்துகிறது. சுனைனா யார், அவ்ர் ஏன் ஜீவாவை அப்படி விழுந்து விழுந்து காதலிக்கிறார் என்பதற்கெல்லாம் கொஞ்சம் வலுவான காரணங்களை சொல்லி இருக்கலாம். பாபி சிம்ஹா இது போன்ற கதையில் நாயகனுக்கு பிரச்சனைக்குரிய ஒரு பாத்திரம் வேண்டும் என்பதற்காக சேர்க்கப்பட்டிருக்கிறார். அப்படி ஒருவரைக் காட்டாமலேகூட இந்தக் கதையை நகர்த்தியிருக்கலாம் என்பது போன்ற பாத்திரம்.

படத்தில் நகைச்சுவை நிறைய இருந்தாலும் பெரும்பாலும் அடல்ட் காமெடி என்று வகைப்படுத்தக்கூடியவை. கட்டாயம் சிறுவர்களுக்குரியவை அல்ல. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் புரிந்துகொண்டு ரசித்து சிரிக்கலாம். துணிச்சலாக பல இரட்டை அர்த்த வசனங்களை வைத்திருக்கிறார்கள். ஆனால் எந்த இடத்திலும் ஆபாசமான வார்த்தைகள் இல்லாமல் இருப்பதில் எச்சரிக்கையுடன் இருந்திருக்கிறார்கள்.

ஜீவாவுக்கு இந்தப் படத்தில் பெரிய சவால் ஒன்றும் இல்லை. பாத்திரத்துக்குத் தேவையானதைக் கொடுத்து கச்சிதமாக செய்திருக்கிறார். காஜல் அகர்வால் அழகையும் கவர்ச்சியையும் காண்பிப்பதோடு நடிப்பதற்கும் வாய்ப்புள்ள பாத்திரத்தை ஏற்றிருக்கிறார். மற்ற காட்சிகளில் தேறுகிறார். எமோஷனல் காட்சிகளில் சொதப்புகிறார்.

படத்தை பெரிதும் கலகலப்பாக்குவது ஆர்ஜே பாலாஜியின் நகைச்சுவை சரவெடிகள்தான். பட்டையைக் கிளப்பியிருக்கிறார். பாலா சரவணனும் அவருக்கு நல்ல துணை புரிந்திருக்கிறார்.
சுனைனா சுமார்ணா. நடிப்புக்கு துளியும் ஸ்கோப் இல்லாத ஒரு வேடம் பாபி சிம்ஹாவுக்கு. மயில்சாமி சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார். வழக்கம்போல் சிரிக்கவும் வைக்கிறார். அவரது மனைவியாக வரும் மதுமிதா சிறிய வேடமென்றாலும் கவனம் ஈர்க்கிறார். காஜல் அக்ர்வாலின் தோழியாக வரும் ஸ்ருதி ராமகிருஷ்ணன் அல்ட்ரா மாடர்ன் உடைகளில் கிளாமர் கூட்டுகிறார்.

டீக்கேவின் வசனங்கள் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன. குறிப்பாக இறுதிக் காட்சிகளில் திருமணம், ஆண்-பெண் உறவு, மறுமணம் ஆகியவை பற்றிப் பேசப்படும் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. இந்த விஷயத்தை ஒரு இளைஞர் முதிச்சியுடன் கையாண்டிருப்பதற்குப் பாராட்டுகள்.

லியோன் ஜேம்ஸின் பாடல்கள் நன்கு படமாக்கப்பட்டிருப்பதால் ரசிக்கவைக்கின்றன. பின்னணி இசை பரவாயில்லை ரகம்.
ஊட்டியின் அழகை பகலிலும் இரவிலதைவிட சிறப்பாகவும் கண்முன் நிறுத்தி மனதைக் குளுமைப் படுத்துகிறது அபினந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவும். ஊட்டியின் லொகேஷன்கள் வீடுகள் ஆகியவை கண்ணுக்கு ரசனையாக இருப்பதில் கலை இயக்குனரின் பங்கு குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் சிரிக்கவைத்து கவலையை மறக்கடிக்க முயற்சித்திருக்கிறார்கள். சிரிக்க வைப்பதில் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.