கமலின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வேன்! – நடிகர் சூர்யா பேட்டி

“ஒவ்வொரு படத்தையும் தேர்வு செய்யும்போது, அளவுகோல் வைத்துக் கொண்டதே கிடையாது. இந்தப் படம் பண்ணினால் எவ்வளவு பேருக்குப் பிடிக்கும் என்பதை மட்டும் பார்ப்பேன். தற்போது ‘சிங்கம் 3’ அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன்” புன்னகையுடன் தொடங்கினார் சூர்யா.

ஒரே இயக்குநரோடு 5 படங்கள். எப்படி இது சாத்தியமானது?

ஒரு இயக்குநரோடு ஒரு நடிகர் தொடர்ந்து பயணிக்க முடியும் என்றால் அதற்குக் காரணம் அதிர்ஷ்டம் என்றுதான் நினைக்கிறேன். எனக்கு ‘சிங்கம்’ என்ற கதையை ஹரி எழுதுவார் என்று நினைத்துப் பார்க்கவில்லை. எங்கள் கூட்டணியில் ‘சிங்கம்’ ரொம்பவே ஸ்பெஷல். எனது வளர்ச்சியும் இப்படித்தான் இருக்கும் என்றும் நான் நினைக்கவில்லை. இயக்குநர்கள்தான் அதை மாற்றியிருக்கிறார்கள். ரசிகர்களும் எனது மாற்றங்களை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

சிங்கம் 3-ன் கதையில் என்ன புதுமை?

கதை விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. கதை ஒரு உண்மை சம்பவம். எம்.ஜி.ஆர். – என்.டி.ஆர். இருவரும் முதலமைச்சர்களாக இருக்கும்போது, தமிழக போலீஸார் ஆந்திராவுக்குச் சென்று ஒரு விஷயத்துக்கு உதவி செய்திருக்கிறார்கள். அதைப் பின்புலமாக வைத்துக்கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் ஹரி. என்றாலும் கிராமம், குடும்பம், வில்லன், சண்டைக் காட்சிகள் என அனைத்துமே கலந்திருக்கும்.

நீங்கள் தயாரித்து நடித்த ‘24’ உங்களுக்கு எதிர்பார்த்த வெற்றியைக் கொடுத்ததா?

கமல் சார் எப்போதுமே ஒரு வரைமுறைக்குள்ளே வரும் படங்கள் பண்ணாமல், அதை விடுத்து ஒரு புதிய முயற்சி செய்து கொண்டே இருக்கிறார். அந்த வழியைப் பின்பற்றுவதில் எனக்கும் ஆர்வம் உண்டு. 3 தலைமுறைகளை வைத்து ‘மனம்’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்துவிட்டு, ‘24’ என்று நேரத்தை வைத்து ஒரு கதையைக் கொண்டுவந்தார் விக்ரம் கே. குமார். அக்கதையைக் கேட்டவுடனே செய்ய வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருந்தது. அது ரசிகர்களில் ஒருதரப்பினருக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம்.

ஆனால், வரும் நாட்களில் அப்படம் அவர்களுக்குப் பிடிக்கும். ஒரு தரப்புக்கு அந்தப் படம் பிடிக்கவில்லை என்பதால், இனிமேல் அந்த மாதிரியான படங்கள் பண்ணாமல் இருக்கப்போவதில்லை. அப்படி யோசித்திருந்தால் ‘வாரணம் ஆயிரம்’ மாதிரியான படங்கள் செய்திருக்க முடியாது. ஒவ்வொரு முறையும் மக்களுக்குப் புதிதான கதையைச் சொல்ல வேண்டும். அதைக் கண்டிப்பாகச் செய்வேன், என்னுடைய முயற்சி நிற்காது.

விக்னேஷ் சிவனுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’, செல்வராகவன் படம் எனத் தொடர் அறிவிப்புகளாக இருக்கிறதே…

இடையில் நானும், கெளதம் மேனனும் ஒரு படம் செய்திருக்க வேண்டியது. அவருடைய தயாரிப்பு படங்களில் மும்முரமாக இருந்ததால், அவை முடிந்ததும் பண்ணலாம் என்று திட்டமிட்டோம். இடையே, விக்னேஷ் சிவனுடன் சந்திப்பு நடைபெற்றது. அவர் இரண்டு கதைகள் சொன்னார், அதில் ஒன்றை முடிவு பண்ணினோம். நான் செய்த படங்களிலிருந்து முற்றிலும் மாறி, நடுத்தரக் குடும்பத்துப் பையனாக விக்னேஷ் சிவன் படத்தில் நடிப்பது சவாலாக இருந்தது.

செல்வராகவன் சார் நான் எதிர்பார்க்கவே இல்லை. உண்மையில், ஜோதிகாவுக்கு 5 மாதங்களுக்கு முன்பு வந்து 2 கதைகள் சொன்னார். அவருடைய ‘யாரடி நீ மோகினி’ தெலுங்குப் பதிப்பில் ஜோதிகாதான் நடித்திருக்க வேண்டியது. திருமணம் சமயம் என்பதால் நடிக்க முடியாமல் போனது. அவரிடம் நிறைய ஐடியாக்கள் இருக்குமே, கேட்கலாம் என்று பேசினேன். உடனே ஒரு முழுக்கதை அடங்கிய ஒரு புத்தகத்தை அனுப்பி வைத்தார். படித்தவுடனே, இதைச் செய்ய வேண்டும் என்று தோன்றியது.

ஜோதிகா நடிப்பில் உருவாகும் ‘மகளிர் மட்டும்’ படம் பற்றி…

‘மகளிர் மட்டும்’ இன்னும் சில தினங்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கிறது. இயக்குநர் பிரம்மா திறமையான இயக்குநர். ஒரு காட்சியை அப்படியே நடித்துக் காட்டுவார். இந்தத் தலைப்பை கமல் சாரிடம் வாங்கும்போது, “‘மகளிர் மட்டும்’ தலைப்பு வாங்கியிருக்கீங்க, கண்டிப்பாக இத்தலைப்புக்கு நீதி செய்வீர்கள் என நம்புகிறேன்” என்று சொன்னார். அவருடைய வார்த்தைக்கு ஏற்றவாறு அந்தப் படம் இருக்கும்.