‘காளிதாஸ்’ படத்தின் முன்னோட்டம்

லேப்பிங் ஹார்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் படம் ‘காளிதாஸ்’.

இதில், நாயகன் பரத் போலீஸ் அதிகாரியாக மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார். நாயகியாக மலையாள நடிகை அன்ஷீத்தல் அறிமுகமாகிறார். முக்கிய பாத்திரத்தில் சுரேஷ் மேனன், கண்ணதாசன் பேரன் ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள்.

இசை – விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு – சுரேஷ் பாலா, எடிட்டிங் – புவன் ஸ்ரீனிவாசன், பாடல்கள் – தாமரை, தயாரிப்பு – தினகரன்.எம்., சிவநேசன் எம்.எஸ்., இயக்கம் – ஸ்ரீ செந்தில். குறும்பட இயக்குனராக இருந்த இவர், இந்த படத்தின் மூலம் திரைப்பட இயக்குனராகி இருக்கிறார்.

படம் பற்றி கூறிய இயக்குனர்…

“நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் பல குறும்பட இயக்குனர்கள் திரை உலகில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்கள். அதற்கு காரணமான அந்த நிகழ்ச்சியின் தலைமை நிர்வாகி சிவநேசன் சார் இந்த படத்தை தயாரிப்பது சிறப்பு. இது போலீஸ் திரில்லர் கதை. பரத் முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் நடித்திருக்கிறார். எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படமாக ‘காளிதாஸ்’ உருவாகி இருக்கிறது” என்றார்.

இந்த படத்தின் தலைப்பு, முதல் போஸ்டர் ஆகியவற்றை நடிகர் கார்த்தியுடன் இயக்குனர் பாண்டிராஜ், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.