காத்தாடி

கேலக்சி பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிக்க, குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் தன்ஷிகா , அவிஷேக் கார்த்திக், வி எஸ் ராகவன், நான் கடவுள் ராஜேந்திரன், காளி வெங்கட், சம்பத் , பேபி சாதன்யா நடிப்பில் வந்திருக்கும் படம் காத்தாடி . நம்பி சுற்றலாமா ? பார்க்கலாம் .

வெளிநாட்டுக்குப் போய் பிழைத்துக் கொள்ள விரும்பும் பெட்டி கேஸ் திருடர்கள் இருவர் ( அவிஷேக், டேனி) அதற்கான பணத்துக்காக ஒரு சிறுமியைக் (பேபி சாதன்யா ) கடத்த , ஒரு பெண் இன்பெக்டர் ( தன்ஷிகா) அவர்களை மறிக்கிறார்.

ஆனால் அவள் நிஜ போலீஸ் அல்ல. திருடியே . மூவரும் சேர்ந்து குழந்தையைப் பறிகொடுத்தவருக்கு (சம்பத்) பொன் செய்து பணம் கேட்கிறார்கள் . அவன் பணத்தோடு வர , குழந்தையோ அவனோடு அனுப்பாதீர்கள் என்கிறது .

ஏன் என்று காரணம் சொல்ல , இவர்கள் குழந்தையோடு ஓட , அவன் பணத்தோடும் பிறகு அடியாள் பலத்தோடும் துரத்த , அப்புறம் என்ன நடந்தது என்பதே காத்தாடி .

திரைக்கதையில் இதை

இயற்கைக் காட்சிகளை போட்டோ எடுக்கும் ஒரு போட்டோகிராபரின் பார்வையில் ஒரு விபத்து நடக்கிறது . அவர் போட்டோ எடுத்த தாய் , மகள் இருவரில் ஒருவர் (வினோதினி) இறக்கிறார் .

அந்த நிகழ்ச்சியை ஒருவர் பார்க்ககிறார் என்று ஆரம்பித்து சம்மந்தப்பட்ட ஒவ்வொருவரையும் கதையில் சம்மந்தப்படுத்தி அசத்துகிறார் இயக்குனர் கல்யாண் .
ஒரு காட்சியில் முக்கிய கதாபாத்திரங்கள் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்கள் எல்லாம் வரலாம் அல்லவா ?

அப்படி ஒரு காட்சியில் சாதாரணமாக வரும் எல்லோருமே பின்னர் கதைப்படி முக்கியத்துவக் கதாபாத்திரங்களாக அமைந்தால் எப்படி இருக்கும் ? அப்படி ஒரு சிறப்பான திரைக்கதை .

விபத்து , அம்மா இறப்பு, (கடத்தப்படும் சிறுமி), காரில் இருந்து சிறுமியை கடத்தும் ஹீரோ, மறிக்கும் பெண் போலீஸ் , அவள் போலீஸ் இல்லை என்பது, கடத்தியவர்களிடமே கெஞ்சும் சிறுமி , துபாய் நண்பன் இருக்கும் இடம் என்று ,

வரிசையாக திருப்பம் காணும் திரைக்கதை கடைசியில் ஆக்சிடென்ட் செய்தது யார் என்று சொல்லும் வரை அப்புறம் காளி வெங்கட்டுக்கு மார்ச்சுவரியில் அடிக்கும் அதிர்ஷ்டம் வரை ,

திருப்பங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது .(ஊட்டிக்குப் போய்க்கிட்டே திரைக்கதை எழுதினீங்களா கல்யாண்?)

காளி வெங்கட்டின் மகள் செண்டிமெண்ட் அருமை

ஜான் விஜய்யின் கிராம போன் கருவி பின் புலம் , அவரது பேச்சு, வி எஸ் ராகவனின் வண்டி, என்று வித்தியாசமான விசயங்களுக்கும் பஞ்சமில்லை . பேபி சாதன்யா பரிதாபம் ஏற்படுத்தும் வகையில் நன்றாக நடிக்கிறார் .

தன்சிகா பாய்ந்து பாய்ந்து சண்டை போடுகிறார் . துபாய் கணவன் கேரக்டரில் முருகானந்தம் , வில்லன் கேரக்டரில் சம்பத் பொருத்தம் . டேனி கேப் விடாமல் பேசி அப்பப்போ சிரிக்க வைக்கிறார் .

பார்த்து சலித்த பழைய கதை என்பதுதான் பெரிய குறை . பழைய மாவில் இப்படி பக்காவாக தோசை சுட்ட இயக்குனர் , கதையிலும் மெனக்கெட்டிருந்தால் ரசிகர்களை, சும்மா சுத்த விட்டிருக்கும் காத்தாடி .எனினும் ஒரு முழுமையான படம் பார்த்த திருப்தியை தருகிறது காத்தாடி

காத்தாடி .. வேகம் ஒகே . ஆரம் கம்மி