சம்பள பாக்கி குற்றச்சாட்டுக்கு ராஜ்கமல் நிறுவனம் அதிரடி அறிவிப்பு

டிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தனது அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில் அவருடன் 13 வருடங்கள் இணைந்து வாழ்ந்த நடிகை கவுதமி, திடீரென கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கமல்ஹாசன் நடித்த ‘விஸ்வரூபம்’ மற்றும் ‘தசாவதாரம்’ ஆகிய படங்களில் தான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதற்கு ராஜ்கமல் நிறுவனம் தனக்கு சம்பள பாக்கி வைத்துள்ளது என்று குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.

ஊழலை ஒழிப்பதே தனது முக்கிய நோக்கம் என்ற அறிவிப்புடன் கமல் கட்சி தொடங்கிய நிலையில் அவர் மீதே சம்பள பாக்கி குற்றச்சாட்டை கவுதமி சுமத்தியது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கவுதமியின் சம்பள பாக்கி குறித்த குற்றசாட்டுக்கு ராஜ்கமல் நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ராஜ்கமல் நிறுவனம் கூறியதாவ்து:

தசாவதாரம்’ படத் தயாரிப்பாளர், ஆஸ்கர் ரவிச்சந்திரன்; ‘விஸ்வரூபம்’ படத் தயாரிப்பு பி.வி.பி சினிமாஸ் நிறுவனத்தார்.

இந்தப் படங்களில் கவுதமிக்கு சம்பளப் பிரச்னை இருந்தால், அதற்கு ராஜ்கமல் பிலிம்ஸ் எந்தவிதத்தில் பொறுப்பேற்க முடியும்?

திரைத்துறையைப் பொருத்தவரை, ஒரு படத்தில் வேலை செய்யக்கூடிய நடிகர்களில் ஆரம்பித்து டெக்னீஷியன்கள் வரை அனைவரிடமும், சம்பளம், முன்பணம் போன்ற விபரங்களைத் தெளிவாக ஒப்பந்தம் போட்டுத்தான் வேலையை ஆரம்பிப்பார்கள்.

அந்தவகையில் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட படங்களில், காஸ்ட்யூம் டிசைனராகக் கவுதமி பணியாற்றியதற்கான சம்பளத் தொகை அனைத்தும் கொடுக்கப்பட்டுவிட்டது.

மாறாக, ராஜ்கமல் நிறுவனம் பணம் தரவேண்டியிருப்பதற்கான ஆதாரங்களைக் கவுதமி கொடுப்பாரேயானால், நிச்சயம் நாங்கள் பணம் தரத் தயாராகவே இருக்கிறோம்.

கமல்ஹாசன் புதிதாக அரசியல் கட்சி தொடங்கி வழி நடத்திவரும் இவ்வேளையில், இப்படியொரு பிரச்னையை கவுதமி எழுப்பியிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது” என்று ராஜ்கமல் நிறுவனம் கூறியுள்ளது.