யாழ் விமர்சனம்

மிஸ்டிக் ஃபிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம் எஸ் ஆனந்த் தயாரித்துக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்க,

டேனியல் பாலாஜி, வினோத், சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, நீலிமா . லீமா , மிஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க,

குழந்தை நட்சத்திரம் லக்ஷனா மற்றும் ஈழத்துக் கலைஞர்கள் பலர் நடிக்கும் படம் யாழ். ஒளிப்பதிவு ஆதி கருப்பையா , மற்றும் நசீர்,

இசை எஸ் என் அருணகிரி , படத் தொகுப்பு எல் எம் தாஸ், கலை ரெம்போன் பால்ராஜ்

யாழ் இசைபட வாழுமா ? பார்க்கலாம் .

பிரபஞ்ச உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள அறிவியலை ஆன்மிகத்தில் தோய்த்து சிவ சக்தித் தத்துவமாக்கி ,

அதை பாடல்களாக்கி யாழ் என்ற இசைக் கருவியை இசைத்துப் பாடிப் பரப்பியவர்கள் பாணர்கள் என்னும் தமிழ் இசை மரபினர் .அவர்களின் பெயராலே யாழ்ப்பாணம் என்று பெயர் வந்தது .

சங்க காலம் தொட்டே தமிழர்கள் வாழ்ந்த ஆதி நிலமாகவும் தமிழர்களின் ஒரு பிரிவினரின் பூர்வீகமாகவும் இலங்கையும் முக்கியமாக ஈழமும் இருந்தது .அப்படி அவர்களுக்கு உரிமைப்பட்ட நிலத்தை உரிமையை சிங்களப் பேரினவாதத்தின் பெயரால், மிருக வெறியோடும் காட்டுமிராண்டித் தனத்தோடும் சிறியோர் பெரியோர் முதியோர் , மகளிர் என்று பாராமல் ,

இந்தியா பாகிஸ்தான் சீனா உள்ளிட்ட ஏழெட்டு நாடுகளின் கூட்டுச் சதியால் சிங்களர்கள் அழித்தனர்.

இன்று சிரியாவில் நடைபெறும் கொடுமையாவது , முழுக்க முழுக்க உலகின் பார்வைக்குப் போகிறது . இந்த அளவுக்குப் பரிதபப்படக் கூட நாதியின்றி அழிந்தது ஈழத் தமிழ் இனம்
குண்டுகளால் தமிழர்கள் அதிர அதிர அலற அலற பதறப்பதற கதறக் கதற கொன்று சிதறடிக்கப்பட்ட அந்த காலகட்டத்தை நம் வாழ்நாளில் நம்மால் துடைக்க முடியாத சோகத்தை ,
மூன்று சம்பவங்களின் மூலமாக அற்புதமாக படமாக்கிக் கலங்கடிக்கிறார், எழுதி இயக்கி உள்ள ஆனந்த் .

தமிழ்ச் செல்வி என்ற பெண் புலியை தேடிவந்த சிங்கள சிப்பாய் ஒருவன்(டேனியல் பாலாஜி ) ,

அதே பெயர் கொண்ட ஓர் அப்பாவிப் பெண்ணை (நீலிமா ராணி) துப்பாக்கி முனையில் நிறுத்தும்போது கண்ணி வெடியில் கால் வைத்து விடுகிறான் .

கதறும் ஒரு கைக் குழந்தை , பதறும் ஒரு முதியவர் அங்கே உடன் !

காலை எடுத்தால் சிப்பாய் செத்து விடுவான். அதற்கு முன்பே அப்பாவி இளம் பெண் தமிழ்ச் செல்வியை துப்பாக்கி முனையில் நிறுத்தி இருக்கிறான் அவன் .

தான் விரும்பும் பெண்ணின் (லீமா பாபு ) காதலைப் பெற்ற நிலையில்குண்டு வீச்சால் அந்தப் பெண் மக்கள் கூட்டத்தோடு இடம் பெயர, அவளைப் பின் தொடரும் காதலன் (வினோத்) ,

வழியில் இன்னொரு மக்கள் கூட்டத்தில் இருந்து குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிதறி வழி மாறிய சிறுமியை ( லக்ஷனா) காண்கிறான் .

காதலியைத் தேடிப் போகும் அதே நேரம் அந்த சிறுமியை அம்மாவிடம் சேர்க்கும் பொறுப்பும் அவனுக்கு !

காதலித்த நிலையில் சண்டையின் போது தப்பி அயல்நாடு போய்விட்ட ஒரு காதலி ( மிஷா) , சண்டை அதிகமான நிலையில் தன் காதலனையும் (சசி) மீட்டுப் போக ஈழம் வருகிறாள் .

நிலத்தில் காலகாலமாக விவசாயம் செய்ய ஆசைப்பட்ட அவனது அம்மா கண்ணி வெடியில் சிக்கி உயிர் துறக்க, காதலியின் விருப்பத்தை மீறி அங்கே உள்ள கண்ணி வெடிகளை எல்லாம் அகற்றி , விவசாயம் செய்யும் நோக்கில்,

அங்கேயே சாத்தியப் படும் வரை வாழ முடிவு செய்கிறான் அவன் . அவளும் அவனின்றி போக மறுக்கிறாள் .பிரபஞ்சம் உருவான விஞ்ஞானத்தை அன்றே உணர்ந்து யாழ் பாடல்கள் மூலம் அதைப் பரப்பிய கதையை,

இளம் தலைமுறைக்கு சொல்லும் பணியை வாழும்வரை செய்து கொண்டு இருக்கிறார் ஒரு பூசாரி ( ஓவியர் வீர சந்தானம்)

சிங்களவனின் அடக்குமுறை, துப்பாக்கியில் சுட்டுத் துளைக்கும் வேகம் , வானில் இருந்து எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் விழுந்து கொத்துக் கொத்தாக தமிழர்களைக் கொல்லும் கொடூரம்,

இவைகளுக்கு இடையே மேற் சொன்ன கதாபாத்திரங்களுக்கு நடக்கும் நிகழ்வுகளை முடிவுகளை இரண்டே மணி நேரத்தில் நிகழும் படமாக சொல்கிறது யாழ் .

நம் தலைமுறையில் நாம் சந்தித்த மாபெரும் கையாலாகாத்தனமும் அவலமும் அவமானமுமான ஈழ இன அழிப்பு எனும் ஆறாத காயத்தை,

மீண்டும் ஒரு பெருவலியாக உணரும் வகையில் நெஞ்சை நெக்குருக்கும் படமாக படத்தை உருவாக்கி இருக்கிறார் ஆனந்த் .

ஆனந்த்

படத்தின் துவக்கத்தில் ஓவியக் கதையாக சொல்லப் படும் யாழ் வரலாறும் பின்னணியில் ஒலிக்கும் ”வாள் கண்டு ஆடாத தலை எங்கள் தலை என்றும் யாழ் கண்டு ஆடுமே சிவசங்கரா” பாடலும் மெய் சிலிர்க்க வைக்கின்றன.

முழுக்க ஈழத்தமிழிலேயே அமைந்த வசனங்களைக் கொண்ட படம் இது என்பது முக்கியச் சிறப்பு . அந்த வகையில் இது ஒரு மொழியியல் பாடமகவும் இருக்கும் படம் இதி

அப்படி ஓர்சூ போர்ச் சூழ்நிலையிலும் காதல் வீரம் தாய்மை , பாசம் நட்பு என்று மிகச் சிறந்த பண்புகளை கொண்ட அந்த மக்களை கண் முன் நிறுத்துகின்றன காட்சிகள் .

“ஒரு காலத்தில் நெல் அறுவடை செய்த வயலில் இப்போது கண்ணி வெடி அறுவடை செய்கிறோம்” என்ற வசனம் கலங்க வைக்கிறது .

“என்னடா கண்ணி வெடியை செயலிழக்க வைக்க முடியலையா என்று , சிக்கிய ராணுவ வீரன் கேட்க

” இது புலிகள் வச்சது இல்லை சார் . நம்ம ராணுவம் வச்சது . சக்தி வாய்ந்தது ” என்ற வசனத்தின் கருத்து நேர்மைக்கு ஒரு வீர வணக்கம் .

“நமக்கு புலிகள் என்றால் என்ன ? சாதாரண பொது ஜனம் என்றால் என்ன ? எல்லோரையும் கொல்ல வேண்டியதுதான் .

அதுதான் நம்ம நோக்கம் ” என்ற சிங்கள சிப்பாய் சொல்லும் வசனம் , நடந்த உண்மைக்கு கட்டியம் கூறுகிறது .

”நல்லூர் நான் என்றால் தேர் நீயடா” என்ற பாடல் வரிகள் நல்லூர் கந்தசாமிக் கோவிலின் தேரோட்டத்தை கண் முன் கொண்டு வருகிறது .

பனை மரத்தின் விரிந்த தோற்றம் உறவுகளை இழந்து கண்ணீர் விட்டு அழும் எம் தமிழ்ப் பெண்களை நினைவு படுத்துகிறது என்ற அர்த்தத்தில் வரும் பாடலும் அப்படியே .

போர் விமானங்கள் பறக்கும் சத்தமும் அதில் இருந்து விழும் குண்டுகள், குழநதைகள் குடிசைகள் பூக்கள் புற்கள் என்ற பேதம் பார்க்காமல்,

சிதறடித்துப் பொசுக்கி கரிகட்டை ஆக்குவதையும் படத்தில் பார்க்கும் போதே பதறுகிறதே…… நேரில் அனுபவித்த நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு எப்படி இருக்கும் என்ற எண்ணமே துடிதுடிக்க வைக்கிறது

பக்கத்தில் குண்டு விழும்போது கூட , பதறாமல் அசையாமல் ‘நமக்கான குண்டு வரட்டும் ‘ என்று மரத்துப் போன மக்களின் மன நிலையைப் பார்க்கும் போது மனசுக்குள் ரத்தம் வருகிறது .

படத்தில் வரும் ஒவ்வொரு கதைப் பாதையையும் முடித்து வைக்கும் முன்பு இயக்குனர் தரும் பரபரப்பும் விதிர் விதிர்ப்பும் நடுங்க வைக்கிறது என்றால்,

முக்கியக் கதாபாத்திரங்களுக்கு ஏற்படும் முடிவுகளும் , எஞ்சி உள்ளோர் எடுக்கும் முடிவுகளும் கண்ணீர்க் காவியமாக வியாபிக்கின்றன .

படத்தில் நடித்துள்ள எல்லா நடிக நடிகையரும் சிரத்தை எடுத்து நடித்து இதயத்தில் இடம் பிடிக்கிறார்கள் எனில் அதில் குழந்தை நட்சத்திரம் லக்ஷனா ஒரு படி மேலே நிற்கிறாள் . வாழ்த்துகள் ! அனைவர்க்கும் பாராட்டுகள் !!

ஈழ இன அழிப்பின் ரத்த சாட்சியாக இப்படி ஓர் அற்புதமான படத்தைக் கொடுத்த எம் ஆனந்த் ஈழத் தமிழர் அல்ல . இப்போது ஆஸ்திரேலியாவில் பணியாற்றுகிற, தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர் என்பது நமக்கெல்லாம் கண்ணீர் கலந்த ஒரு கவுரவம் .

இன உணர்வுள்ள ஒவ்வொரு தம்ழனும் , மனிதாபிமானம் உள்ள ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய படம் யாழ் !

யாழ் …. ஆழ் மனதில் என்றும் நிலைக்கும் !