‘உன்னை நினைத்து’ படத்தை ஞாபகப்படுத்தும் அஸ்வினி-அழகேசன் காதல்

சென்னையில் நேற்று மாலை கல்லூரி மாணவி அஸ்வினி, அழகேசன் என்ற வாலிபரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அழகேசனை அஸ்வினி காதலிக்க மறுத்ததால் இந்த கொலை நடந்ததாக முதலில் செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன

சூர்யா நடித்த ‘உன்னை நினைத்து’ படத்தை அனைவரும் பார்த்திருப்போம். இந்த படத்தில் லைலாவை விரும்பும் சூர்யா, அவருடைய முன்னேற்றத்திற்காக தான் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை செலவு செய்வார்.

லைலாவும் தனக்கு உதவி செய்யும் சூர்யாவை விரும்புவார். ஆனால் சூர்யாவை விட வேறு நல்ல வரன் கிடைத்ததும் சூர்யாவை லைலா ஒதுக்கிவிடுவார். இதனால் அதிர்ச்சி அடையும் சூர்யா, அவர் முன்னே நன்றாக வாழ்ந்து காட்டுவார். இது படம், ஆனால் அஸ்வினி வாழ்வில் இதில் பாதி உண்மையாக நடந்துள்ளது.

அஸ்வினியும் அழகேசனும் ஒரே பகுதியில் இருப்பவர்கள் என்பதால் இருவருக்கும் சிறுவயது முதலே பழக்கம் உண்டு. தந்தையில்லாமல் வறுமையில் வாடிய அஸ்வினி குடும்பத்திற்கு அழகேசன் பல உதவிகள் செய்துள்ளார்.

தண்ணீர் கேன் போடுவது உள்பட கிடைத்த வேலையை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தின் பெரும்பகுதியை அஸ்வினியின் படிப்புக்கே அழகேசன் செலவு செய்துள்ளார். இதனால் அஸ்வினிக்கும் அழகேசன் மீது காதல் மலர்ந்தது.

இது அஸ்வினியின் தாய்க்கும் தெரிந்திருந்தாலும், அஸ்வினியை அழகேசனுக்கு திருமணம் செய்து கொடுக்க அவர் விரும்பவில்லை. எனவே அஸ்வினிக்கு அறிவுரை கூறி அவர் மனதை மாற்றியுள்ளார்.

தாயின் பேச்சை கேட்ட அஸ்வினி, அதன் பின்னர் அழகேசனை தவிர்க்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அழகேசன், அஸ்வினியை பின் தொடரவே அஸ்வினி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார், அழகேசனுக்கு அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் சிறுவயது முதல் பழகிய அஸ்வினியை மறக்க முடியாத அழகேசன் மீண்டும் அவரை பின் தொடர்ந்துள்ளார். இதனால் மீண்டும் அஸ்வினி போலீசில் புகார் கொடுக்க, அழகேசன் கைது செய்யப்பட்டார்.

இதனால் மனம் வெறுப்படைந்த அழகேசன், தன்னை ஏமாற்றிய அஸ்வினியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் நேற்று மாலை கல்லூரி வாசலில் காத்திருந்தார்.

அந்த நேரத்தில் அஸ்வினி கல்லூரியில் இருந்து வெளியே வரவே, மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தி கொலை செய்தார். பின்னர் தான் தற்கொலை செய்ய முயற்சிக்கும் முன்பே பொதுமக்களால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்து போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

சூர்யாவை போல் அழகேசனும் தன்னை ஏமாற்றிய அஸ்வினி போல் சிறப்பாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற முடிவை எடுத்திருந்தால் நேற்று ஒரு பெண்ணின் உயிர் அநியாயமாக பலியாகி இருக்காது.