இந்திய சினிமாவை உலுக்கிய நீதிமன்றின் தீர்ப்பு..! வசூல் நாயகனுக்கு 5 ஆண்டு சிறை!!

அபூர்வ வகையான கறுத்த மான் வகையை சட்ட விரோதமாக வேட்டையாடினார் என்ற குற்றத்திற்காக இந்திய பொலிவூட் பிரபல நடிகர் சல்மான் கானிற்கு ஐந்து வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஜெய்பூர் நீதிமன்றம் ஒன்று இந்த தண்டனையை வழங்கியுள்ளதுடன், 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்துள்ளது.

இந்திய வனவிலங்கு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டிய மிக அபூர்வமான இரண்டு கறுத்த மான் வகையினை 1998ஆம் ஆண்டு வேட்டையாடிய குற்றத்திற்காகவே சல்மான் கானுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்திய மேற்கு பிரதேச ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வன பிரதேசத்தில் திரைப்படபிடிப்பிற்காக சென்றிருந்த வேளையிலேயே இந்த குற்ற செயலை அவர் புரிந்துள்ளார்.

இதற்கு முன்னரும் சட்டவிரோதமாக வேட்டையாடினார் என மூன்று முறை குற்றஞ்சாட்டப்பட்டிருந்த போதிலும், அவற்றில் இருந்து நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், சிறைத்தண்டனை வழங்கப்பட்ட சல்மான் கான் ஜோத்பூர் மத்திய சிறைச்சாலைக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளார்.

எனினும், இன்றைய தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்ய சல்மான் கான் தீர்மானித்துள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

சல்மான் கானுடன், கடந்த 2013ஆம் ஆண்டு பாடசாலை மாணவி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டிற்காக சிறைத்தண்டனையை பெற்றுள்ள ஆன்மீக தலைவர் என கூறப்படும் அஸ்ராம் பாபுவும் ஒரே கூண்டில் சிறையடைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ராஜஸ்தானை சேர்ந்த பிஷோனி சமூகத்தவர்கள் மானை வழிபாடு செய்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.