200 தியேட்டர்களில் அல்லு அர்ஜூன் படம்

தமிழ் சினிமா போராட்டம் முடிந்ததை தொடர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பட வெளியீடு முறையில் பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.

அதன்படி ஒவ்வொரு வாரமும் அதிகபட்சம் 4 திரைப்படங்களையே வெளியிட வேண்டும், அதிகபட்சமாக 300 தியேட்டர்களில்தான் வெளியிட வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒரு குழுவை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அமைத்துள்ளது. இந்த குழுவினர் அனுமதி அளிக்கும் படங்களே ரிலீஸ் செய்ய வேண்டும். அதன்படி இந்த வாரம் 4 தமிழ் திரைப்படங்களை ரிலீஸ் செய்ய அனுமதி அளித்துள்ளனர்..

அதில் வி.வம்சி இயக்கத்தில் அல்லு அர்ஜுன், சரத்குமார், அனு இமானுவேல், அர்ஜுன், சாருஹாசன் முதலானோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா படமும் ஒன்று. சரத்குமார் வில்லனாக நடித்துள்ள இந்த படத்தில் அல்லு அர்ஜுன் தேசபற்று மிக்க இராணுவ அதிகாரியாக நடித்துள்ளார்.

அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கும் தேசப்பற்றுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பெரும் பொருட் செலவில் உருவாகியுள்ள இந்த படம் தமிழகத்தில் 200 தியேட்டர்களில் வெளியாகிறது. தமிழ் பதிப்பு 150 தியேட்டர்களிலும், தெலுங்குப் பதிப்பு 50 தியேட்டர்களிலும் வெளியாகிறது.

மகளிர் மட்டும், கடுகு உட்பட 18 படங்களை வெளியிட்ட சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா படத்தை தமிழகம் முழுக்க வெளியிடுகிறது.

இந்த வாரம் வெளியாகவிருக்கும் 4 படங்களில் ரசிகர்களை கவரும் அம்சங்கள் கொண்ட படமாக என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா படம் இருக்கும் என்கின்றனர்.