நயன்தாரா வழியில் ஹன்சிகா

நயன்தாரா இப்போதெல்லாம் ஹீரோக்களுடன் கட்டிப்பிடித்து பாட்டுப்பாடி ஆடி நடிக்கும் படங்களை விரும்புவதில்லை. சோலோவாக நின்று விளையாட விரும்புகிறார். அதனால் புது இயக்குனர்களாக இருந்தாலும் ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள் என்றால் சம்பளம் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் நடிக்கிறார். மாயா, அறம் படங்களின் வெற்றி இதற்கு காரணம் இப்போது இதே பாணிக்கு வந்திருக்கிறார் ஹன்சிகா.

பம்ளிமாஸ் நடிகை, அழகு பொம்மை இமேஜ்களை உடைத்தெறிந்து தானும் நடிப்பு திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்று கருதுகிறார். அதற்காக இப்போது அறிமுக இயக்குனர் ஜமால் என்பவர் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ஜமால், இயக்குனர் லக்ஷ்மணிடம் உதவியாளராக இருந்தவர். ரோமியோ ஜூலியட் படத்தில் ஹன்சிகா நடித்தபோது அவருக்கு நன்கு அறிமுகமாகியிருந்த ஜமால், இப்போது ஹன்சிகாவிடம் கதை சொல்லி இம்பரஸ் பண்ணி ஒப்புதல் வாங்கி விட்டார்.

இது ஆக்ஷ்ன் திரில்லர் படம். ஹீரோயின் தான் ஆல் இன் ஆல். படப்பிடிப்புகள் ஜூன் மாதம் தொடங்குகிறது. மொத்தம் 55 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. இதில் 25 நாள் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடக்கிறது. இந்த ஆண்டின் இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். படத்தை பற்றிய முழு விபரம் விரைவில் தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட இருக்கிறது.