‘விஸ்வாசம்’ படப்பிடிப்பில் இசையமைப்பாளர் இமான்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பிற்கு இசையமைப்பாளர் இமான்-ஐ அழைத்துள்ளார் அஜித்.

இமானும் சென்னையிலிருந்து ஐதராபாத் சென்று படப்பிடிப்பைப் பார்த்து ரசித்துள்ளார். இது பற்றி இமான் கூறியிருப்பதாவது, “என்னுடைய பாடல்களின் படப்பிடிப்பைப் பார்ப்பது எப்போதாவது தான் நடக்கும். ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பில் என்னுடைய பாடல்களுக்கு எளிமையின் மனிதன் நடனமாடுவதைப் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது. என்னை அழைத்ததற்கு நன்றி அஜித் சார்,” என அவர் டுவிட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் இமான் திரையுகத்தில் அறிமுகமாகி இத்தனை ஆண்டுகள் ஆனாலும் இப்போதுதான் முதல் முறையாக அஜித் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.