ரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் என்.ஜி.கே. படத்தின் படப்பிடிப்பு நடவடிக்கைகளுக்காக நடிகர் சூர்யா ராஜமுந்திரி சென்றிருந்தார். இதன்போது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரை புடைசூழ்ந்தமையினால் படப்பிடிப்புக்கள் இரத்து செய்யப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ராஜமுந்திரியில் இடம்பெற்ற படப்பிடிப்பில் பங்கேற்க சூர்யா அவ்விடத்திற்கு சென்றுள்ளார். இதன்போது சூர்யா வந்த தகவல் அறிந்த ரசிகர்கள், அவரை பார்ப்பதற்கு படப்பிடிப்பு தளத்தில் குவிந்துள்ளனர்.

இவ்வாறு குவிந்த ரசிகர்கள், சூர்யாவை முற்றுகையிட்டு செல்பி எடுக்கவும், கைகுலுக்கவும் முண்டியடித்தனர். ஆகையால் ரசிகர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகளால் முடியாமல் போயுள்ளது.

இதனால் படப்பிடிப்பு நடவடிக்கையில் சூர்யாவால் கலந்துகொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டமையினால் படப்பிடிப்பு இரத்து செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அடுத்தநாள் பொலிஸாரின் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் நடித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.