எச்சரிக்கை – திரைவிமர்சனம்

உலகத்தில் அனைத்தையும் தீர்மானிக்கும் பணத்தை தவறான வழியில் சம்பாதிக்க நினைத்தால் என்ன ஆகும் என்ற எச்சரிக்கையே படம்.

தந்தையை கொன்ற குற்றத்துக்காக சிறைக்கு சென்று திரும்பும் கிஷோர், சிறுவயதில் அனாதையாக விடப்பட்ட தனது அக்கா மகன் விவேக் ராஜ்கோபாலுக்கு எதையாவது செய்ய வேண்டுமென்று நினைக்கிறார். ஜெயிலில் இருந்து வெளியே வரும் கிஷோர், பைக் திருடி பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் விவேக்கை வைத்து பெரிய அளவில் பணம் சம்பாதிக்க திட்டமிடுகிறார்.

அதற்காக ஒரு பெரிய கடத்தலை செய்யவும் முடிவு செய்து, அதற்கான வேலையில் இறங்குகிறார். கடைசியில் விவேக்கை வைத்து ஆள்கடத்தல் செய்து அதன் மூலம் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கத் திட்டமிடுகிறார். அதன்படி தொழிலதிபரின் மகளான வரலட்சுமி சரத்குமாரை கடத்துகின்றனர்.

இதுஒருபுறம் இருக்க மனைவியை இழந்த, ஓய்வுபெற்ற காவலரான சத்யராஜ் தனது மகளுடன் வசித்து வருகிறார். தனது மகளை விட்டு பிரியமுடியாமல் தவிக்கும் சத்யராஜிடம் வரலட்சுமி கடத்தப்பட்ட செய்தியை அவரது அப்பா கூறி, தனது மகளைக் காப்பாற்றி தரும்படி சொல்கிறார்.

சத்யராஜ், காவல்நிலைய அதிகாரிகளின் உதவியுடன் தனது வீட்டில் வைத்தே கடத்தல்காரர்களை தேடி வருகிறார். கடைசியில், சத்யராஜ், கடத்தல்காரர்களை பிடித்தாரா? கிஷோர், விவேக் தங்களது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்களா? வரலட்சுமி என்ன ஆனார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கிஷோர் வழக்கமான தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி தனது இடத்தை தக்கவைத்துக் கொள்கிறார். சத்யராஜ் ஒரு போலீஸ் அதிகாரிக்கு உண்டான மிடுக்குடனும், தனக்கே உரித்தான நக்கலுடனும், மகள் மீது பாசம் காட்டுவதில் அப்பாவாகவும் அசத்தியிருக்கிறார்.

தனது ஒவ்வொரு படத்தையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் வரலட்சுமி இந்த படத்திலும் தனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். விவேக் ராஜகோபாலின் நடிப்பு கவரும்படியாகவே இருக்கிறது. தனது உடல்மொழிகளால் அனைவரையும் ஈர்க்கிறார். யோகி பாபு வரும் காட்சிகள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. அனைவருமே அவர்களது கதாபாத்திரத்தை நிறைவாகவே செய்து இருக்கிறார்கள்.

ஒரே நாள், அதிகபட்சமாக இரண்டே இடங்கள், பிரதானமாக ஐந்து கதாபாத்திரங்கள் ஆகியவற்றைக் கொண்டு நிறைவான திரைப்பட அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் சர்ஜுன்.கே.எம். தான் எடுத்துக்கொண்ட கதையை அதன் களத்தில் அழகாகப் பொருத்திப் பார்வையாளருக்குத் தெளிவாகக் கடத்தியிருக்கும் இயக்குநருக்குப் பாராட்டுகள். குறும்படங்கள் மூலம் தனது திறமையை காட்டிவந்த சர்ஜுன் தற்போது முழு நீள படத்திலும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். எனினும் முதல் பாதியில் வேகமாக செல்லும் படத்தை, இரண்டாம் பாதியின் மெதுவான திரைக்கதை பாதிக்கிறது. அனைவருமே தவறான வழியில் சம்பாதிக்க நினைப்பதையே திரைக்கதையாக நகர்கிறது. கருத்து பழையதாக இருந்தாலும் அதை சொன்ன விதத்தில் கவர்கிறார் இயக்குனர் சர்ஜுன்.

நீ புத்திசாலி என்றால் நான் முட்டாள் இல்லை என்று உனக்குத் தெரியும், ஒரு முறைதான் தப்பு பண்ணிணேன். மறுபடியும் அந்தத் தப்பைப் பண்ண மாட்டேன், ஜெயில் வாழ்க்கை நிறைய மாத்திருக்கு. அது எல்லாத்தையும் சுக்குநூறா உடைச்சுருச்சு என வசனங்கள் நச்சென்று இருக்கின்றன.

கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பாடல், பின்னணி இசை ஆகியவை படத்தை மெருகேற்றுகின்றன. சுதர்‌ஷன் ஸ்ரீநிவாசன் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது.

மொத்தத்தில் `எச்சரிக்கை´ விறுவிறுப்பு.