சர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு

விஜய் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகி உள்ள படம் சர்கார். அரசியல் கதையில் உருவாகி உள்ள இப்படம் தீபாவளிக்கோ அல்லது அதற்கு முந்தைய சில தினங்களிலோ ரிலீஸாக இருக்கிறது. ஆனால் இப்படம் ஒரு புதிய பிரச்னையில் சிக்கி உள்ளது.

சர்கார் படத்தின் கதை வருண் என்கிற ராஜேந்திரன் எழுதிய செங்கோல் படத்தின் கதை என கூறப்படுகிறது. 2007-ம் ஆண்டே இந்த கதையை அவர் எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளாராம். அந்தக் கதையை திருடி தான் சர்கார் படத்தை முருகதாஸ் இயக்கி உள்ளதாக வருண் குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக எழுத்தாளர்கள் சங்கத்திலும் பிரச்னை எழுப்பட்டது. சர்கார் கதை திருட்டு தான் என்பது கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் முருகதாஸ், இது தனது கதை தான் உறுதியாக உள்ளார்.

இந்நிலையில், சர்கார் படம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வருண் என்கிற ராஜேந்திரன் அவசர வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். அதில், சர்கார் கதை என்னுடையது. எனது செங்கோல் கதையை திருடி தான் முருகதாஸ் சர்கார் படத்தை இயக்கி உள்ளார். சர்கார் படத்தை வெளியிட கூடாது. எனது மனுவை அவசர வழக்காக எடுத்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த வழக்கு நாளை(அக்., 25) விசாரணைக்கு வருகிறது.

கத்தி கதை திருட்டும் களமிறக்கம்
இதனிடையே கத்தி படத்தின் போதும் கதை திருட்டில் சிக்கியிருந்தார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர் என்பவர் இயக்கிய தாகபூமி படத்தின் கதையை தான் முருகதாஸ் கத்தி படமாக எடுத்தாக குற்றம் சாட்டப்பட்டு, கோர்ட் வரை வழக்கு சென்றது. தற்போது சர்காரிலும் அது தொடர்வதால், இயக்குநர் முருகதாஸ், நடிகர் விஜய் உள்ளிட்ட 5 பேர் மீது போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் ராஜசேகர் நாளை(அக்., 25) புகார் கொடுக்க உள்ளார்.