“சுழல்” விமர்சனம்

 

“வாழ்க்கையில சூழ்நிலைகள் சுழலா மாறி மனுஷனை எப்படி சுத்தி சுத்தி அடிக்குது!’ங்கறதை படமா எடுக்கணும்னு ஆசைப்பட்டிருக்காங்க. ஆனா… அதை சரியா சொல்லவிடாம எந்த சூழ்நிலை சுத்தி சுத்தி அடிச்சுதோ? பாவம்!

குடும்பத்தோட வறுமையை போக்க எலெக்ட்ரீஷியனா வேலை பார்த்துக்கிட்டே கல்லூரியில படிக்கிற பிரபு (பாரீஸ்), நண்பர்களை கூட்டிட்டு சொந்த ஊருக்கு போறாரு. போன இடத்துல தன்னோட நண்பன் பரத்தும்(ஹேமச்சந்திரன்), தோழி காவேரியும் (ரோஸ்லின்) காதலிக்கிறதை தெரிஞ்சிக்கிறாரு. அந்த நேரத்துல “உன்னையும் ஒருத்தி காதலிக்கிறா’ன்னு பிரபுகிட்டே சொல்றாங்க காவேரி. “அதுயாரு?’ன்னு தெரிஞ்சிக்கிற ஆர்வத்துல, பரத்தும் காவேரியும் போற பைக்கை பிரபு துரத்த… திடீர்னு நடக்குற விபத்துல காவேரி இறந்து போறாங்க. பரத் படுகாயமடையுறாரு. அவர் உயிரை காப்பாத்த “50 லட்ச ரூபாய் தேவை!’ங்கற சூழல்ல, பாதியில விட்டுட்டு வந்த ஒர வீட்டோட எலெக்ட்ரிகல் வேலையை முடிக்க கிளம்புறாரு பிரபு.

அந்த வீட்டுல இருக்கிற டேனியல் (பிரதாப் போத்தன்) “எனக்கு ஏராளமான பணம் கிடைக்கப் போகுது’ன்னு மனைவிகிட்டே போதையில புலம்புறதை பிரபு கவனிக்கிறாரு. தனக்கு வர்ற ஒரு கூரியரை பார்த்து உற்சாகமாகுற டேனியல், ஓவரா போதை ஏத்திக்கிட்டு இறந்து போ, பணத்துக்காக. அந்த கூரியர்ல இருந்த விலாசத்தைத் தேடி கொச்சி கிளம்புறாரு பிரபு. அங்கே மனித உயிர்களை பணயம் வைச்சு நடுக்கடல்ல பணக்காரங்க நடத்துற சூதாட்டத்துல கலந்துக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுறாரு. ஆட்டத்தோட முடிவுல சில உயிர்களை காலி பண்ணி கோடிகளை சம்பாதிச்சுக்கொடுக்கிற பிரபுவுக்கு கட்டு கட்டான பணம் கமிஷனா கிடைக்குது. அதை எடுத்துக்கிட்டு நண்பனை காப்பாத்த கிளம்பறவரை, தோத்துப்போனவங்க வழிமறிக்க… பணத்தோட திரும்பி வந்தாரா? நண்பனை காப்பாத்தினரா?ங்கறதை “அடபோங்கப்பா’ன்னு நம்மையும் அறியாம புலம்ப வைக்கிற “க்ளைமாக்ஸ்’ல சொல்றாங்க.

இதுக்கு நடுவுல “ரன்’ படத்துல வில்லனா பட்டையை கிளப்பின அதுல் குல்கர்னி, ரஷ்ய கடத்தல்காரங்களை தேடுறேன்!னு கதாநாயகனை கடைசி வரைக்கும் “பாலோ’ பண்ணி வர்றாரு. போன்ல உத்தரவு போடுறதை தவிர, அதிரடியா ஒண்ணுமே செய்யாத அந்த கதாபாத்திரத்தால் படத்துக்கு எந்த பலனும் இல்லை. என்னதான் அதுல பண்றது “ரகசிய ஆபரேஷன்’னாலும் அவர் பொலிஸா? சிபிஐயா?ன்னு கூட கடைசி வரைக்கும் சொல்லாத இயக்குனரோட கடமை உணர்ச்சி.. கண்ணைக்கட்டுதுடா சாமி!

மொத்தத்தில் “சுழல்” – “வலுவில்லாத சுழல்”!