தந்தைக்கு ஜீவனாம்சம் வழங்க நடிகை லிசிக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவு

மலையாள திரையுலகில் 1982–ம் ஆண்டு ‘இத்திரி நேரம் உத்திரி காரியம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லிசி.

ஏராளமான மலையாள படங்களில் மோகன்லால், மம்முட்டி உள்பட பிரபல நடிகர்களுடன் நடித்து மலையாள பட உலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். மேலும் தமிழில் கமலஹாசன் ஜோடியாக ‘விக்ரம்’ படத்தில் நடித்தார். தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்த நடிகை லிசி பிரபல மலையாள டைரக்டர் பிரியதர்சனை திருமணம் செய்துகொண்டு திரையுலகில் இருந்து விலகினார்.

சென்னையில் குடியேறிய நடிகை லிசி அங்கு பிரியதர்சனின் டப்பிங் தியேட்டரை நிர்வாகம் செய்து வந்தார். மேலும் மலையாள நடிகர்கள் கிரிக்கெட் அணியையும் பொறுப்பேற்று நடத்தி வந்தார்.

இதற்கிடையில் லிசிக்கும் பிரியதர்சனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் எர்ணாகுளத்தை சேர்ந்த வர்க்கி என்பவர் கேரள ஐகோர்ட்டில் நடிகை லிசி மீது ஒரு வழக்கு தொடர்ந்தார்.

அதில், தான் நடிகை லிசியின் தந்தை என்றும் தனக்கு லிசி பல வருடங்களாக பணம் கொடுப்பதில்லை. எனவே தனக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஜீவனாம்சம் தர உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு வர்க்கிக்கு நடிகை லிசி மாதம் ரூ.5500 ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது.

இதை எதிர்த்து லிசி அப்பீல் செய்தார். அவர் தனது மனுவில் வர்க்கி எனது தந்தை அல்ல எனவே அவருக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது என்று கூறியிருந்தார். நடிகை லிசியின் மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு வர்க்கி என்பவர் லிசியின் தந்தையா இல்லையா என்பது பற்றி எர்ணாகுளம் ஆர்.டி.ஓ. விசாரித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை வர்க்கிக்கு நடிகை லிசி மாதம் ரூ.5500 ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது.